குழந்தைகளில் இரண்டு பேரைத் தேர்ந்தெடுங்கள். ஒரு குழந்தைக்கு ஜிங்கு என்று பெயரிடுங்கள். மற்றொரு குழந்தையை மங்கு என்று அழையுங்கள். இப்பொழுது ஜிங்குவையும், மங்குவையும் ஒருவரை ஒருவர் பார்க்கும்படி எதிரேதிரே அமர வையுங்கள். மங்குவின் கண்களை கட்டிவிடுங்கள். அதன் அருகில் ஒரே அளவுள்ள இருபது மரத்துண்டுகளை வைத்து விடுங்கள். கைக்கு அடக்கமாக, ஒரே அளவுள்ள எந்தப் பொருளாக இருந்தாலும் பரவாயில்லை.
இப்பொழுது விளையாட்டைத் தொடங்குங்கள். நீங்கள் சொல்லிக் கொடுத்தபடி ஜிங்கு, மங்குவைப் பார்த்து, ‘ஒரு கட்டையை எடுத்து உன் முன் வை’ என்று சொல்கிறான். உடனே மங்கு தன் இடது கையை முதுகுக்குப்பின்னால் வைத்துக்கொண்டு வலது கையால் ஒரு கட்டையை எடுத்துத் தன் முன் வைக்கிறான்.
‘இப்பொழுது இன்னொரு கட்டையை எடுத்து, முதலில் வைத்த கட்டையின் மீது வை’ என்கிறான் ஜிங்கு.
மங்கு இரண்டாவது கட்டையை எடுத்து முதல் கட்டையின் மேல் வைக்க முயற்சிக்கிறான். ஆனால், கண் கட்டப்பட்டிருப்பதால், மங்குவின் கை எங்கெங்கோ போகிறது. ஜிங்கு அவனை நெறிப்படுத்துகிறான். வழிகாட்டுகிறான்.
கட்டைகள் ஒன்றன் மேல் ஒன்றாக அமர்கின்றன. அவை சரியான முறையில் அடுக்கப்பட்டால் நேராக நிமிர்ந்து நிற்கும். முன் பின்னாக அடுக்கப்பட்டிருந்தால் சரிந்து விழுந்து விடும். இருபது கட்டைகளும் ஒன்றன் மேல் ஒன்றாக சீராக அடுக்கப்பட்டு விட்டால், ஜிங்குவைப் பாராட்டுங்கள். வயதுக்கேற்றாற் போல கட்டைகளின் எண்ணிக்கையை வைத்துக் கொள்ளுங்கள்.
இதே விளையாட்டை மங்கு’வின் கண்ணைக் கட்டாமல் விளையாடச் சொல்லிப் பாருங்கள். ஜிங்கு நெறிப்படுத்த, மங்கு கண்ணைத் திறந்து கொண்டு, விரைவாக அதிக கட்டைகளை வைக்க முடியும். பிறகு இருவரும் சேர்ந்து பேசி, இருவருமே சேர்ந்து கட்டைகளை அடுக்கச் சொல்லுங்கள். இன்னும் நேர்த்தியாகவும் வேகமாகவும் செய்து முடிக்க முடியும்.
*****
கற்றல்: தகவல் தொடர்பு, வழிகாட்டல், தலைமைத்துவம், நட்பு, உறவு, ஆலோசனை, கற்றல், கற்பித்தல்
விளையாட்டை எழுதியவர்: ஜான் பிரிட்டோ பரிசுத்தம், ஆஸ்திரேலியா
To buy the book on 240 inspirational and motivational games for children, email pjohnbritto@gmail.com
*****
Comentários