top of page

செயற்கை நுண்ணறிவு தொழிற்நுட்பம்: எதிர்கால விவசாயம் மற்றும் உணவு பண்பாட்டிற்கு அடிக்கும் சாவு மணி?

Writer's picture: John Britto ParisuthamJohn Britto Parisutham

Updated: Jan 26





செயற்கை நுண்ணறிவுத் தொழிற்நுட்பம்

 

எதிர்கால விவசாயத்திற்கும் உணவுப் பண்பாட்டிற்கும்

அடிக்கும் சாவு மணி?

 

- பேரா. முனைவர். ஜான் பிரிட்டோ பரிசுத்தம், ஆஸ்திரேலியா.

(2025, சனவரி)

 

திரும்பிய பக்கமெல்லாம், எல்லோரும் இதைப்பற்றியே பேசிக் கொண்டிருக்கிறார்கள்; செயற்கை நுண்ணறிவு. முதலில் செயற்கை நுண்ணறிவு என்பதைப் பற்றிய சிறு குறிப்பைப் பார்ப்போம். பிறகு அது எதிர்கால விவசாயம் மற்றும் உணவு உற்பத்தியில் ஏற்படுத்தப் போகும் அதிரடி மாற்றங்களைப் பார்ப்போம்.

 

செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன?

 

ஒரு குழந்தை அம்மா பேசுவதைக் கேட்கும். ஆசிரியர் சொல்வதைக் கற்கும். பிறகு தானாகவே வார்த்தைகளை உருவாக்கும். மனித மூளை அதற்கு ஏற்றாற்போல் இருக்கிறது. கிட்டத்தட்ட இது போன்ற வேலையைத் தான் செயற்கை நுண்ணறிவு செய்கிறது.

 

செயற்கை நுண்ணறிவு (AI) என்பது மனிதர்களைப் போலச் சிந்திக்கும் இயந்திரங்களை உருவாக்கிப் பயன்படுத்துவது. அந்த இயந்திரங்கள், மனிதர்களைப் போலவே கற்றுக்கொள்ளும். ஒவ்வொரு படிநிலையாகச் சொல்லிக்கொடுக்கத் தேவையில்லை. மனித மொழிகளைப் புரிந்து கொள்ளும். கேள்விகளுக்குப் பதில் அளிக்கும். கூடுதல் விளக்கம் கொடுக்கும். (சிரி, அலெக்ஸா, சேட் ஜிபிடி போன்றவற்றைக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.) அது மட்டுமல்ல, ஒளிப்படங்களையும் காணொளிகளையும், வரைபடங்களையும், மருத்துவப் படங்களையும் பார்த்து ஆய்வு செய்து, முடிவுகளை அறிவிக்கும். ஆளில்லா மகிழுந்துகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். சாப்பாட்டுக் கடையில் உங்களுக்கு இட்லி, தோசையைக் கொண்டு வந்து வைக்கும். தானாகவே முடிவுகளை எடுக்கும். பெரும் அளவிலான தரவுகளை இனம் காணும். சிக்கல்களைத் தீர்க்கும். புதிய தரவுகளைப் பெற்றுக்கொள்ளும். இவை எல்லாவற்றிற்கும் அல்கோரிதம் (Algorithm) என்ற கணிணி படிமுறைத் தீர்வை அது பயன்படுத்திக்கொள்கிறது.

 

இது வெறும் முன்னோட்டம் தான். செயற்கை நுண்ணறிவின் அப்பா – செயற்கைப் பொது நுண்ணறிவு (Artificial General Intelligence – AGI) வரப்போகிறார். அதற்கடுத்து அதன் தாத்தா – செயற்கை சூப்பர் நுண்ணறிவு (Artificial Super Intelligence – ASI) வரப்போகிறார். அப்பா தொழிற்நுட்பம் வந்தால் இயந்திரம் வெறும் இயந்திரமாக இருக்காது. மனிதர்கள் செய்யும் அனைத்து அறிவுச் செயல்களையும் செய்வார். தாத்தா தான் சூப்பர். அவர் வந்தால் இயந்திரங்கள் மனிதர்களை விட அதிக அறிவுடன் நடக்கும்.

 

இப்போதைக்குக் குழந்தை தான் வந்திருக்கிறது. அதுவே இன்னும் முதலாம் வகுப்பில் சேரவில்லை. அதற்குள் சுகாதாரம், நிதி, கல்வி, விவசாயம், உற்பத்தி, அரசியல் பொழுதுபோக்கு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தன் விளையாட்டைத் தொடங்கிவிட்டது.

 

செயற்கை நுண்ணறிவு என்ன செய்யப்போகிறது?

 

செயற்கை நுண்ணறிவு, மனிதகுலத்தின் வளர்ச்சி என்று ஒரு சாராரும், இல்லை இது மனிதகுலத்தின் வீழ்ச்சி என்று மற்றொரு சாராரும் வாதிடுகிறார்கள். இந்தக் கட்டுரையில், செயற்கை நுண்ணறிவு, இவ்வுலகத்தில் இருக்கும் மனிதர்களுக்கு மட்டுமல்ல, எல்லா உயிரினத்திற்கும் செய்யப்போகும் ஐந்து பயங்கரமான விளைவுகளைப் பற்றி விவாதிக்க இருக்கிறோம்.

 

அவை என்னென்ன?

·       ஒன்று, உழவர்களின் வேலை உடனடியாகப் பறி போகும்.

·       இரண்டாவது, பாரம்பரிய விவசாய அறிவு அற்றுப் போகும்.

·       மூன்றாவது, உணவு உற்பத்தி, விலை, பகிர்வு எல்லாம் ஒரு சிலரது கைகளில் முடங்கிப் போகும்.

·       நான்காவது, சுற்றுச் சூழல் சீர் கெடும்.

·       ஐந்தாவது, இணையத் தாக்குதல்களால் பொருளாதார உறுதியற்ற தன்மை உருவாகும். ஆனால், அதற்கு முன்பு செயற்கை நுண்ணறிவு மனிதகுலத்தின் வளர்ச்சி என்று சொல்பவர்கள் கூறும் மூன்று வாதங்களைப் பார்ப்போம்.

 

·       முதலாவதாக, செயற்கை நுண்ணறிவின் மூலம் கிடைக்கும் துல்லியமான தரவுகளால் விவசாயம் மேலும் சிறக்கப் போகிறது.

·       இரண்டாவதாக, செயற்கை நுண்ணிறிவின் கண்டுபிடிப்புகளால் உணவு உற்பத்தியும், உணவு விநியோகச் சங்கிலியும் நெறிப்படுத்தப்படும்.

·       மூன்றாவதாக, செயற்கை நுண்ணறிவு, உணவுப் பாதுகாப்பை மேற்பார்வையிடுவதோடு உணவின் தரத்தையும் உயர்த்தும்.

 

1. துல்லியமான தரவுகளால் சிறக்கப் போகும் விவசாயம்

 

கடந்த வாரம், ஆஸ்திரேலியா மெல்பர்ன் நகரில் ஒரு கூட்டத்தில் கலந்துக்கொண்டேன். அதில் ஒரு விஞ்ஞானி செயற்கை நுண்ணறிவைப் பற்றிப் பெருமையாகப் பேசிக் கொண்டிருந்தார். அவர் சொன்னார்:

 

“செயற்கை நுண்ணறிவு எல்லாத் தளத்திலும் உதவிகரமாக இருக்கப் போகிறது. இனிதான் துல்லியமான விவசாயம் செய்ய முடியும். செயற்கை நுண்ணறிவு சென்சார்கள், ட்ரோன்கள் (ஆளில்லா வான்கலம்) மற்றும் செயற்கைக் கோள்களின் உதவி கொண்டு மண் வளத்தை, பயிர் நலத்தை, வானிலை முறைகளை முறையாகவும் துல்லியமாகவும் தெரிந்துக் கொள்ள முடியும்.

 

இது விவசாயிகளின் நீர்பாசன முறையையும், உரப் பயன்பாட்டையும், பூச்சிக் கட்டுப்பாட்டையும் மேம்படுத்தும். கழிவுகளைக் குறைக்கும். விளைச்சலை அதிகரிக்கும். இது மனிதகுலத்திற்கு ஓர் ஆசிர்வாதம். உங்களுக்குத் தெரியுமா? மைக்ரோசாப்ட் நிறுவனம் ஃபார்ம் பீட்ஸ் (Farm Beats) என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அது விவசாயிகளுக்கு ஒரு வரப்பிரசாதம்”

என்றார்.

 

நான் உடனே ஃபார்ம் பீட்ஸ் திட்டத்தைப் பற்றி ஆராய்ந்தேன்.[1] இதில் IoT, Edge, AI ஆகிய தொழிற்நுட்பங்கள் கையாளப்படுகின்றன. இந்தியாவில் சிறு விவசாயிகள் மத்தியில் இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தத் தொடங்கி விட்டார்கள்.  இதன் மூலம் நீர் மற்றும் பிற வளங்களைப் பாதுகாத்து உற்பத்தித் திறனை அதிகரிக்க வழிவகுக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு தொழிற்நுட்பத்தைப் பயன்படுத்தித் தரவுகளைப் பெற மைக்ரோசாப்ட் நிறுவனம் உதவுவதாக Jack Ellis[2] தன் கட்டுரையில் குறிப்பிடுகிறார்.

 

1.     புதிய கண்டுபிடிப்புகளால் நெறிப்படுத்தப்படப்போகும் உணவு  

      உற்பத்தியும், உணவு விநியோகச் சங்கிலியும்.

 

அதே விஞ்ஞானி தொடர்ந்து பேசினார்:

 

“செயற்கை நுண்ணறிவு புதிய புதிய நூதனமான கண்டுபிடிப்புகளைக் கண்டு பிடிக்கும். அதன் மூலம் உணவு வீணாவதைத் தடுக்க முடியும். ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு உணவைக் கொண்டு செல்வதைச் சிறப்பாக்க முடியும். தேவை என்ன என்பதை முன்கூட்டியே தெரிந்து அதன் படி விளைவிக்க முடியும். கணியின் படிமுறைத் தீர்வு (Algorithm) மூலம் தாவரங்களிலிருந்தும் விலங்கிலிருந்தும் அல்லாமல் ஆய்வகங்களிலேயே மாற்று புரதங்களையும், இறைச்சிகளையும் உருவாக்க முடியும். இது எவ்வளவு சிறப்பானது! மனித குலத்தின் தேவைகளைப் பசுமைப் புரட்சி செய்ததைவிட நூறு மடங்கிற்கும் அதிகமாகச் செய்யமுடியும். பியாண்ட் மீட் (Beyond Meat) நிறுவனங்கள் போல பல நிறுவனங்கள் இப்பணியில் ஈடுபடும். தாவரங்களிலிருந்து புரதச்சத்து நிறைந்த, பார்க்க அழகான, ருசியான இறைச்சியை உற்பத்திசெய்யும். புளூ ரிவர் டெக்னாலஜியின் (Blue River Technology) ரோபோட் பண்ணைகளில் பூச்சிக்கொல்லிகளைக் குறைத்து களைகளை நுணுக்கமாக அகற்றும்”

என்றார்.

 

இறைச்சிக்கு அப்பால் (Beyond Meat)[3] என்பது ஓர் அமெரிக்க நிறுவனம். அவர்களுடைய இணையப் பக்கத்தில்,

 

            “இன்றைய உணவு முறை, விலங்குகளுக்கு அநீதி இழைக்கக் கூடியதாக இருக்கிறது. அவற்றின் இருப்பைப் பயமுறுத்துகிறது. மனிதர்களும் சுற்றுச்சூழலும் நலமாக இருக்கும் நல்லெண்ணத்துடன், தாவரங்களிலிருந்து இறைச்சியை உருவாக்குகிறோம்.” என்று சொல்லியிருக்கிறார்கள்.

 

ஆனால் Newton னும் Daniel[4]லும் எழுதியுள்ள ஆய்வுக்கட்டுரையில், இப்படிப்பட்ட மாற்று இறைச்சி சில பயன்களைக் கொடுத்தாலும் பல ஆபத்துகளைக் கொடுக்கும் என்று 37 அமெரிக்க நிபுணர்களைப் பேட்டிக் கண்டு அறிவுறுத்துகிறார்கள். செயற்கை நுண்ணறிவு கொண்டு இவ்வாறு புதிய நூதன கண்டுபிடிப்புகளைச் செய்வது ஆபத்துகளைக் கொடுத்தாலும் அவற்றை மறைத்துவிட்டு அது கொடுக்கப் போகும் வியாபார நலன்களை மட்டும் சிலர் பார்க்கின்றனர்.

 

செயற்கை நுண்ணறிவு விவசாயம் மாற்று உணவிற்கான மேம்பாட்டிற்கு உதவும் என்று வாதிடுபவர்களின் மூன்றாவது கருத்து என்ன?

 

2.     செயற்கை நுண்ணறிவு, உணவுப் பாதுகாப்பை மேற்பார்வையிடுவ தோடு உணவின் தரத்தையும் உயர்த்தும்.

 

செயற்கை நுண்ணறிவு, உணவுப் பாதுகாப்பை மேற்பார்வையிடுவதோடு உணவின் தரத்தையும் உயர்த்தும் என்கிறார்கள். IBM Food Trust – ஐப் பாருங்கள். அது அமெரிக்காவின் பெரு வணிக வளாகங்களில் ஒன்றாகவும், உலக உணவு விநியோகத்தில் பெரும்பங்கு வகிக்கும் Walmart நிறுவனத்துடன் இணைந்தும், செயற்கை நுண்ணறிவைக் கொண்டு உணவு எங்கு உற்பத்தியாகிறது என்றும், எப்படிப் பெருங்கடைகளுக்குக் கொண்டு வரப்படுகிறது என்றும், வெளிப்படையாகத் தரவுகளைக் கொடுக்கிறது என்றும் மார்தட்டுகிறார்கள். ஆனால் சில ஆய்வுகளில் அந்த வாதம் மறுக்கப்படுகிறது. அவற்றைத் தொடர்ந்துப் பார்ப்போம். செயற்கை நுண்ணறிவால் உணவுப் பாதுகாப்பிற்கு சில நன்மைகள் கிடைத்தாலும், பலரையும் பாதிக்கும் ஆபத்துகள் நிறைய உள்ளன என்று அந்த ஆய்வுகள் உறுதிபடச் சொல்கின்றன.

 

ஆகவே, செயற்கை நுண்ணறிவு செய்யப் போகும் ஆபத்துகள் என்னென்ன என்று எடுத்துக்காட்டுகளோடு பார்ப்போம்.

 

1.     உழவர்களின் வேலை பறி போகும்.

 

எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. 1960, 70களில், தமிழகத்தில் விவசாயிகளின் போராட்டங்கள், இயந்திரப் பயன்பாட்டை எதிர்த்து நடந்தன. டிராக்டர்கள், பம்புசெட்டுகள், களைக்கொல்லி அடிக்கும் இயந்திரங்கள் எனப் பல இயந்திரங்கள் உள்ளே நுழைந்தன. முப்பதிலிருந்து நாற்பது விழுக்காட்டு விவசாயிகள் வயல்களிலிருந்து தூக்கி அடிக்கப்பட்டார்கள். பிற்காலத்தில் நடவு இயந்திரங்கள், அறுவை எந்திரங்கள் என்று இன்னும் பல இறக்கப்பட்டன. எழுபது விழுக்காட்டு விவசாயிகள் வேலையற்றுக் கடனிலும் கவலையிலும் மூழ்கிப் போயினர். சமீபத்தில் தஞ்சாவூர் போயிருந்த பொழுது கவனித்தேன். உள்ளூர் மக்கள் யாரும் வயல் பக்கம் போவதில்லை. வெளியூர் ஆட்கள் வேலைசெய்து கொண்டிருக்கிறார்கள். மிச்சமுள்ள இந்த வேலைகளையும் இல்லாமல் ஆக்குவதற்கு இப்பொழுது செயற்கை நுண்ணறிவு தொழிற்நுட்பம் தயாராக ஊர் வாசலில் வந்து நிற்கிறது.

 

விவசாயிகளைப் போலவே வேடமிட்ட ரோபோக்கள் (மனித இயந்திரங்கள்) நாற்று நடும், களை பறிக்கும், உரம் இடும், மருந்து தெளிக்கும், நீர் பாய்ச்சும், அறுத்துக் கட்டி ஆலைகளுக்கு அனுப்பி வைக்கும். கற்பனை செய்து பாருங்கள். சற்றேறக் குறைய 60, 70 ஆண்டுகளுக்கு முன்னால் ஏர் கலப்பையும், காளையும், மண்வெட்டியும், கருக்கரிவாளும், ஏற்றமும், ஏரியும் செய்த வேலைகளைச் செயற்கை மனித இயந்திரங்கள் செய்து கொண்டிருக்கும்.

 

அப்பொழுது பொருளாதாரம் எப்படி இருக்கும்? யாருக்குச் சாதகமாக இருக்கும்? சமூகத்தில் அமைதி நிலவுமா? வறுமையும் பசிப்பிணியும் போக்கப்பட்டிருக்குமா? இந்தியா, பிரேசில் போன்ற நாடுகளின் முதுகெலும்பு விவசாயிகள் தான் என்று சொல்லப்படும் நிலை எப்படி இருக்கும்? இந்தக் கேள்விகள் கவலையூட்டுவனவாக இருக்கின்றன.

 

இதெல்லாம் கற்பனையில் சொல்லப்படுகின்றனவா? இல்லை. அமெரிக்காவில், கலிபோர்னியா மாகாணத்தில், ABUNDANT Robotics[5] என்ற நிறுவனம் ஓர் ஆப்பிள் பறிக்கும் ரோபோட்டை வேலைக்கு அமர்த்தியிருக்கிறது. எந்த ஆப்பிள் பழுத்துவிட்டது, எது பழுக்கவில்லை, எது பறிக்க உகந்தது எனச் சரியாகக் கண்டுபிடித்து, உறிஞ்சி குழாய்களின் மூலம் வேகமாகப் பறித்துவிடும். இரவிலும் உன்னிப்பாக கூர்ந்து நோக்கிப் பறிக்கும் திறன் கொண்டவை இந்த ரோபோட்கள். அந்த ரோபோட் பத்து ஆள் வேலையைக் களைப்பில்லாமல் இரவு பகலாக, துல்லியமாகச் செய்து முடிக்கும்.

 

இன்னொரு எடுத்துக்காட்டு கொடுக்கிறேன். தமிழகத்தில் கையால் ஓட்டும் குபோட்டா இயந்திரங்கள் வந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. ஆகையால் ஜப்பானைச் சேர்ந்த குபோட்டா நிறுவனத்தின் பெயர் பலருக்குத் தெரிந்திருக்கும். ஆனால் இது தெரியுமா? குபோட்டா நிறுவனம் ‘X’ என்கிற ஒரு வித மாயவித்தை செய்யும் ரோபோட் போன்ற ஒரு குட்டி டிராக்டரை 2020 இல் அறிமுகப்படுத்தியது. இப்பொழுது செயற்கை நுண்ணறிவின் உதவியுடன், ஆட்களே இல்லாமல் வயலில் அது வேலை செய்கிறது.

 

X என்னென்ன செய்யும் என்று தேவநேசன் ஜோ[6] என்ற விஞ்ஞானி தம் ஆய்வுக்கட்டுரையில் பின்வருமாறு எழுதுகிறார்:

 

நீங்கள் தான் வயலுக்குச் சொந்தக்காரர் என்று வைத்துக்கொள்வோம். உங்கள் மணிக்கட்டில் ஒரு கடிகாரம் கட்டிக்கொள்வீர்கள். உங்கள் கடிகாரத்திற்கும் X ரோபோட்டுக்கும் இணைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. முதலில் X மின்சக்தியைப் பெற்றுத் தன்னையே சார்ஜ் செய்து கொள்கிறது. பறக்கும் டிரோன் சென்சார்கள் உதவியுடன் மண், நீர், விதை, கால நிலை போன்றவற்றின் தரவுகளை உள்வாங்கிக் கொள்கிறது. அதை X நினைவில் வைத்துக் கொள்வதோடு அல்லாமல், தொடர்ந்து “கற்றுக்” கொள்கிறது. தரவுகளைப் பெற்றதும் “போதுமான தரவுகளைப் பெற்றுவிட்டேன். வயலுக்குப் போகிறேன்” என்ற ஒரு குறுஞ்செய்தியை உங்களின் கடிகாரத்திற்கு அனுப்பும். “சரி. போ” என்று நீங்கள் ஆணையிட்டதும், X கிளம்பி வயலுக்குப் போய்விடும். வயலைப் பண்படுத்தும். “உழுதுவிட்டேன். பார்க்கிறீர்களா?” எனச் செய்தி அனுப்பும். அந்தச் செய்தியை, உங்கள் வீட்டில், நீங்கள், காலை ஆட்டிக்கொண்டோ, கடலையைக் கொரித்துக்கொண்டோ, தொலைக்காட்சி பார்த்துக்கொண்டோ, பெற்றுக்கொள்ளலாம். வேண்டு மென்றால் காணொளியில் பார்த்து எப்படி உழுதிருக்கிறது என்று உறுதி செய்துக் கொள்ளலாம். “சரி! தண்ணீர் பாய்ச்சு” என்று ஆணையிட்டால், நீரைப் பாய்ச்சும். நீரிலும் பயணம் செய்யும். அடுத்து, நாற்றுகளை நடும். நீங்கள் கடைக்குப் போகலாம். அல்லது நண்பர்களோடு அரட்டை அடித்துக் கொண்டிருக்கலாம். “நாத்து நட்டுவிட்டேன்” என்றதும், “சரி, வீட்டுக்குப் போ” என்றால் போய் அடைந்து விடும். இடையில் உரம் போட, களை எடுக்க, பூச்சி மருந்து தெளிக்க, சும்மா போய் வயலைப் பார்க்க என்று Xஐ நீங்கள் ஏவி விடலாம். அப்பொழுதெல்லாம் வேறு ஊருக்கோ, அல்லது நாட்டிற்கோ விடுமுறையைக் கழிக்கச் செல்லலாம். பதத்திற்கு வரும் போது “அறுவடைக்கு தயாராகிவிட்டது. அறுவடை செய்யப் போகிறேன்” என்று X சொல்லும். ஒரு பட்டனைத் தட்ட வேண்டியது தான். நெல் மூட்டைகளும், காய்கறி மற்றும் பழங்களும் வீடு வந்து சேரும்.

 

இன்னொரு ஆய்வு இன்னும் பயமுறுத்துகிறது. சுனில் மெஹ்வான்ஷியின்[7] ஆய்வு தான் அது. அவர் பின்வருமாறு கூறுகிறார்:

 

            2050 ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகை 970 கோடியை நெருங்கும். அப்பொழுது எல்லா மக்களுக்கும் உணவு அளிக்க வேண்டிய நெருக்கடி வரும். அதனால் செயற்கை நுண்ணறிவு தொழிற்நுட்பம் தான் ஒரே தீர்வு என முடிவுக்கு வருகிறார்கள். ஆனால் அதனால் பல ஆபத்துகள் இருக்கின்றன.

 

·       ரோபோட்கள், சென்சார்கள், தரவுகளை ஆய்வுசெய்யும் தொழிற் நுட்பங்கள் எல்லாவற்றிற்கும் அதிக செலவு செய்யவேண்டும். அது சிறு, குறு விவசாயிகளால் முடியாது. அதனால் அவர்கள் தங்கள் நிலத்தை விற்றுவிட்டு போண்டி ஆக வேண்டியது தான்.

·       தானியங்கி இயந்திரங்கள் வந்துவிடுவதால், விவசாய வேலை இல்லாமல் போகும்.

·       பெரு நிறுவனங்கள் விவசாயத் தரவுகளைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பர். விவசாயமும் உணவும் அவர்களது இராஜ்யமாகிவிடும்.

·       சிலர் வரையறுக்கும் படிமுறைத் தீர்வின் (அல்காரிதம்) அடிப்படையில் செயற்கை நுண்ணறிவு செயல்படுவதால், அவர்கள் தீர்மானிக்கும் பயிர்களும், கால்நடைகளுமே சந்தைக்கு வரும்.

·       அதி நவீன, அதி தீவிர விவசாயம் செய்யப்படும் போது, இரசாயன உரமும், இரசாயன மருந்துக் கொல்லியும் நிறைய பயன்படுத்தப்படும். அது ஏற்கனவே பாழாகி வரும் மண்ணையும், நீரையும், சுற்றுச்சூழலையும் மிகுந்த அளவில் மாசு படுத்தும்.

 

இதே அச்சத்தை 2023ல் SOLEX[8] நிறுவனமும் பதிவு செய்தது. கூடுதலாக சில ஆபத்துக்களையும் முன்வைக்கிறது.

·       செலவு செய்ய முடியாத நிலையோடு, இயந்திரங்களைக் கையாளக்கூடிய அறிவும் பயிற்சியும் கூடுதல் சிரமத்தைக் கொடுக்கும்.

·       விவசாயம் மற்றும் உணவு தொடர்பான தரவுகள் இணையத்தில் வைக்கப்பட்டிருக்கும் போது அதற்குப் போதுமான பாதுகாப்பு இருக்காது.

·       விவசாயப் பணிகளில் சாதாரணமானவர்கள் ஈடுபடமுடியாது.

·       இப்பொழுதே ததிங்கிணத்தோம் போடும் ‘ஆற்றல் நுகர்வு’ இன்னும் கூடுதலாகும். கழிவு உற்பத்தி அதிகமாகும்.

 

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் கரும்பு, பருத்தி போன்ற பயிர்களுக்குச் செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் ரோபோ அறுவடை இயந்திரங்களைப் பயன்படுத்துவதால், விவசாயத் தொழிலாளர்களுக்கான தேவை குறைந்துள்ளது. இது கிராமப்புறங்களில் வாழ்வாதாரத்தை வெகுவாகப் பாதித்துள்ளது. தமிழ்நாட்டில், காவிரி டெல்டாப் பகுதியில் அறிமுகப்படுத்தப் பட்ட செயற்கை நுண்ணறிவால் இயங்கும் நெல் நடவு இயந்திரங்கள் பாரம்பரிய விவசாயத் தொழிலாளர்களின் தேவையைக் குறைத்து, விவசாயத் தொழிலாளர் களுக்கான வேலை வாய்ப்புகளைக் குறைத்துள்ளன. கோயமுத்தூரில் ரன்ஜனி[9] யும் அவர் குழுவினரும் செய்த ஆய்வில், விவசாயிகள் வேலையின்றி நடுரோட்டில் வந்து நிற்பதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது என்பதை உறுதிப்படுத்துகிறார்கள். ஜரீனாவும் மணிடா[10]வும் செய்த ஆய்விலும் இதை எச்சரிக்கையாகக் குறிப்பிடுகிறார்கள்.

 

யோசித்துப் பாருங்கள். சாதாரண விவசாயிகள் பயனற்ற மனிதர்களாக மாறிவிடும் நிலை வராதா? செயற்கை நுண்ணறிவின் வேலை இத்தோடு நிற்கவில்லை. இதுவரை மனிதகுலம் நெற்றி வியர்வை நிலத்தில் விழக் கற்றுச் சேகரித்து வைத்துள்ள பாராம்பரிய விவசாய அறிவு மங்கிப் போகும். அதை இழந்து, விவசாயிகள் நிர்க்கதியாய் நிற்பார்கள். எப்படி என்று பார்ப்போம்.

 

2.     பாரம்பரிய விவசாய அறிவு அற்றுப் போகும்.

 

“வடகிழக்கில் மேகம் கருத்துக் கொண்டு வருகிறது. மழை பெய்யப் போகிறது” என்பார் என் தந்தை. சற்றே அதிகமாகக் காற்றடித்தால் “ம்கூம்! இனி மழை வராது” என்பார். “கோடையில் பயறு, உளுந்து தெளிக்கனும். அறுத்தோன கொழுஞ்சி விதையைத் தூவனும். அடுத்த போகத்திற்குக் கொழுஞ்சியை உழுது மடக்குனா நல்ல தழைச்சத்தா ஆகும்” என்பார். “மாடும் சாணியும் வெள்ளாமைக்கு அழகு” என்பார். இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். என் வாரிசுகள் செயற்கை நுண்ணறிவு விவசாயத்திற்கு மாறினால் இந்த பாரம்பரிய அறிவு எங்கு போகும்? சமூகத்தின் நினைவிலிருந்து மறந்து போகும் அல்லவா?

 

மண்ணின் தன்மை தெரிந்து, நீரின் தன்மை புரிந்து, மழையின் இயல்பை அறிந்து, மனிதர்களின் நிலையை உணர்ந்து, மனிதகுலம் சேகரித்து வைத்த விவசாய அறிவு அழிந்து ஒழிய விடலாமா? நெல் பயிரிட்டு, பிறகு பயிறு உளுந்து போட்டு, அடுத்து கொழுஞ்சி விதைப்பது என வயலிலும், மாற்றுப்பயிராகக் காய்கறிகளும் பழங்களும் நட்டு எடுப்பது எனத் தோட்டத்திலும் இருந்த கலப்பு விவசாயப் பண்பொழிந்து ஒற்றைப்பயிர் சாகுபடிக்குத் தோதுவான செயற்கை நுண்ணறிவு ஓர் அறிவு என்றும் ஒத்துக்கொள்ள முடியுமா? பல்லுயிர் வாழவேண்டும் என்பதை விட, செயல்திறனை முன்னிறுத்தும் செயற்கை நுண்ணறிவு தேவையா? பரவலாக இருந்த அறிவு, ஒருமுகப்படுத்தப்பட்டு ஒரு சிலரிடம் சிக்காதா?

 

இந்தக் கேள்விகள் வெறும் யூகத்தில் கேட்கப்படவில்லை. யதார்த்தமாகி வருகின்ற சில எடுத்துக்காட்டுகளை உங்களுக்குச் சொல்கிறேன். ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள 54 நாடுகளில் கிட்டத்தட்ட 49 நாடுகளில் உள்ள விவசாய நிலையை ஆய்ந்து வெளிவந்த ஆய்வில், செயற்கை நுண்ணறிவு செய்யப்போகும் ஆபத்துகளை வெளியிட்டனர். ஹெல்ட்ரத் கோர்ட்னியும்[11] அவரது நண்பர்களும் செய்த அந்த ஆய்வில் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்கள்.

      “உலகில் உள்ள விவசாயிகளில் 95% சிறு குறு விவசாயிகளாக இருக்கின்றனர். அவர்கள் உலகின் 45% உணவைத் தயாரிக்கின்றனர். அதில் 70% உணவு சப் சஹாரன் என்று அழைக்கப்படுகிற மத்திய, தென் ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து வருகிறது. செயற்கை நுண்ணறிவு தொழிற்நுட்பம், விவசாயிகளின் பாரம்பரிய அறிவைத் தரவுகளின் அடிப்படையில் தொகுத்து வழங்கி நன்மை செய்யும் என்று நம்பிக்கை ஊட்டினாலும், அது யதார்த்தத்தில் நடப்பதாகத் தெரியவில்லை. ஏனென்றால், அது பெரு நிறுவனங்களுக்கு, பெருமளவிலான ஓரினப் பயிர்களைத் துல்லியமாகச் செய்யவே வடிவமைக்கப்பட்டிருக்கிறது. சிறு குறு விவசாயிகளைக் கணக்கில் எடுக்காத தொழிற்நுட்பம் அவர்களைக் காணாமல் அடித்துவிடும்.”

 

அதே போல, ஓக்கென்குவு[12] மற்றும் குழுவினர், செய்த ஆய்வில் கீழ்க்கண்டவாறு முடிவுக்கு வருகிறார்கள்:

 

      “விவசாயத்தில் செயற்கை நுண்ணறிவைப் புகுத்தும் வேலைகள் துவங்கிவிட்டன. அது மனிதகுல அறத்திற்கு எதிராகவும், சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை விளைவிப்பதுமான அறிகுறிகள் இப்பொழுதே தெரிகின்றன. முதலாவதாக, தரவுகள் தனியார் மயமாக்கப்படும். அதிகாரத்தில் உள்ளோரின் கையில் அது போகும். இரண்டாவதாக, அதீத மின்சார உபயோகத்தால், அதீத கரியமிலவாயு உமிழ்வதைத் தடுக்கமுடியாது. இது குறித்த விழிப்புணர்வை விவசாயிகள் மத்தியில் ஏற்படுத்தவேண்டும்.”

 

பஞ்சாப் மாநிலத்தில் ட்ரோன் அடிப்படையிலான பூச்சி மேலாண்மை போன்ற செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் துல்லிய விவசாய நடைமுறைகள், பாரம்பரிய விவசாய முறைகளை மாற்றியமைத்து, இயற்கை பூச்சிக் கட்டுப்பாடு நுட்பங்கள் பற்றிய பழங்கால அறிவை அழித்து வருகின்றன.

 

தமிழ்நாட்டில் தஞ்சாவூர் போன்ற மாவட்டங்களில், செயற்கை நுண்ணறிவால் நீர்ப்பாசனம் மற்றும் பயிர் திட்டமிடல் நடக்கிறது. அதனால் என்ன நடக்கிறது? பாரம்பரியமாக ஊரணிகளை நம்பியிருந்த விவசாயிகள் இப்பொழுது அதை மறந்து போய்க்கொண்டிருக்கிறார்கள். இந்தச் சூழலில், உலகப் பொருளாதார அமைப்பின் (World Economic Forum)[13], இந்தியப்பிரிவு, இந்திய அரசுடன் இணைந்து தெலுங்கானா மாநிலத்தில் ஒரு முயற்சியைச் செய்தது. வேளாண் கண்டுபிடிப்புக்கான செயற்கை நுண்ணறிவுத் திட்டம் என்ற திட்டத்தைத் தொடங்கியது. 2020 ஆம் ஆண்டு சூன் மாதம் தொடங்கிய திட்டம், கிட்டத்தட்ட 7000 சிறு விவசாயிகள் செயற்கை நுண்ணறிவுத் தொழிற்நுட்பத்தைப் பயன்படுத்த 45க்கும் மேற்பட்ட பயிற்சிகளை நடத்தியுள்ளது. தமிழகத்தில், பயிர்களில் பூச்சிகள் மற்றும் நோய்களைக் கண்டறிந்து, பயிர்களைப் பாதுகாக்க விவசாயிகளுக்கு அறிவுறுத்துவதற்காக, தமிழ்நாடு மின்-ஆளுமை நிறுவனம் (TNeGA)[14] ஒரு செயற்கை நுண்ணறிவு அமைப்பை உருவாக்கி வருகிறது.

 

 

3.     உணவு உற்பத்தி, விலை, பகிர்வு எல்லாம் சிலரது கைகளில் அடங்கிப் போகும்.

 

சில பெரு நிறுவனங்கள் வசம் செயற்கை நுண்ணறிவுத் தொழிற்நுட்பம் இருக்கும் பட்சத்தில், அந்த நிறுவனங்களே, ஏகபோக உரிமையுடன், விவசாயத்தை, உணவு உற்பத்தியை, அதன் விலையை, அதன் பகிர்வை நிர்ணயிக்கும். அவர்களின் இலாப நோக்கத்திற்காகவே எல்லா முடிவுகளும் எடுக்கப்படும் என்பதில் இருவேறு கருத்துகள் இருக்கமுடியாது. இது உணவு உத்திரவாதத்தையும், இறையாண்மையையும் கேள்விக்குள்ளாக்காமல் இருக்குமா? பேயர்-மான்சாண்டோ, சின்ஜெண்டா போன்ற பெரிய நிறுவனங்கள், சிறு குறு விவசாயிகளின் தேவையை விட, இலாபத்திற்கே முன்னுரிமை அளிக்கலாம்.

 

உலகின் நண்பர்கள் (Friends of the Earth) இணையப் பக்கத்தில் ஜேசன் டேவிட்சன்[15] கீழ்க்கண்டவாறு எழுதுகிறார்:

 

      “ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பேயர் இரசாயன நிறுவனம், 2018 ஆம் ஆண்டு, 630 கோடி டாலர்களுக்கு அமெரிக்க நாட்டைச் சேர்ந்த மான்சாண்டோ விவசாய நிறுவனத்தை வாங்கியது. இந்த இரு நிறுவனங்களும் இணைந்ததால் உலக விவசாய முறைகளிலும் கொள்கைகளிலும் பல மாற்றங்கள் நடந்து வருகின்றன. எடுத்துக்காட்டாக, உண்ணும் உணவிலும், அருந்தும் நீரிலும் இரசாயனக் கலப்பு அதிகமாகிவிட்டது. களைக்கொல்லி களுக்கு அடிமையான மரபணு மாற்றுப் பயிர்கள் அதிகமாகிவிட்டன. இந்த நிலை விவசாயிகளின் சுதந்திரத்தைப் பறித்து, அவர்களைத் தங்கள் தாளத்திற்கு ஏற்றாற்போல ஆடும் பொம்மைகளாக மாற்றும்.” என்கிறார்கள்.

 

ரோஷிட்டா தாரா[16]வும் இன்னும் சிலரும் இணைந்து செய்த ஆய்வில் கீழ்க்கண்டவைகளைப் பதிவிடுகிறார்கள்.

 

      “செயற்கை நுண்ணறிவு தொழிற்நுட்பத்தை வெளிப்படைத் தன்மையோடும், நியாயத்தோடும், தனியுரிமைகளைக் காக்கும் வண்ணமும், பொறுப்புடனும் பயன்படுத்த வேண்டும். இந்தத் தொழிற்நுட்பத்தால் பல பயன்கள் இருந்தாலும், அறத்தோடு செயல்படுத்தவில்லையென்றால், அது மனிதர்களுக்கும் மற்ற உயிர்களுக்கும் ஆபத்தாகவே முடியும்.

என்கிறார்கள்.

 

இதையே ஸ்பேரோ[17]வுடன் சிலர் இணைந்து செய்த ஆய்விலும் வலியுறுத்துகின்றனர். எடுத்துக்காட்டாக, தென் அமெரிக்காவை எடுத்துக் கொண்டால் செயற்கை நுண்ணறிவுத் தொழிற்நுட்பத்தை மையப்படுத்திய “விவசாய வியாபாரம்” உணவுச் சந்தையைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது. உள்ளூர் விவசாயிகளும் உற்பத்தியாளர்களும் சந்தையை விட்டு வெளியேறிக்கொண்டிருக்கின்றனர். இதே நிலை தான் இந்தியா உட்பட எல்லா நாடுகளிலும் வந்து கொண்டிருக்கிறது.

 

இந்தியாவில் ஐடிசி (ITC) போன்ற பெரிய வேளாண் வணிக நிறுவனங்கள், செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான விநியோகச் சங்கிலிக் கருவிகளைப் பயன்படுத்துகின்றன. அப்படிப்பட்ட பெரு வேளாண் வணிக நிறுவனங்களே விவசாய சந்தைகளில் ஆதிக்கம் செலுத்துகின்றன. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அணுக முடியாத சிறு விவசாயிகளை அவை ஓரங்கட்டு கின்றன. தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் போன்ற பகுதிகளில் உள்ள பெரிய விவசாயிகளுக்குத் தனியார் நிறுவனங்கள் விவசாய ஆலோசனைகளைக் கொடுக்கின்றன. அவை முழுக்க செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் ஆலோசனைகளாக இருக்கின்றன. சிறு குறு விவசாயிகளுக்கு அப்படிப்பட்ட ஆலோசனைகள் எட்டாக்கனியாகவே இருக்கின்றன.

 

2019ம் ஆண்டு அனிதா குருமூர்த்தி, தீப்தி பர்தூர்[18] வெளியிட்ட ‘இந்திய விவசாயத்தில் செயற்கை நுண்ணறிவு’ என்கிற ஆய்வுக் கட்டுரையில் உணவின் எதிர்காலம் எண்ணியல் முறையில் (digital) இருக்கிறது, எண்ணியல் முறை செயற்கை நுண்ணறிவில் அடங்கி இருக்கிறது. செயற்கை நுண்ணறிவு சில பெருநிறுவனங்களின் கையில் இருக்கிறது என்று தெளிவுபடுத்துகிறார்கள். அமெரிக்காவின் John Deere நிறுவனத்தின் ஆளில்லா டிராக்டர்களின் வளர்ச்சிக்கு உதவி செய்ய, AI ஸ்டார்ட்அப் நிறுவனமான ப்ளூ ரிவர் நிறுவனத்தில் முதலீடு செய்தது. இது விவசாயத்தின் அடுத்த அலை. அவர்களின் எதிர்காலச் சந்தை எவ்வாறு AI-ஐ சார்ந்துள்ளது என்பதைக் குறிப்பிடுகிறது என்கிறார்கள். அதைத் தொடர்ந்து 2018 ஆம் ஆண்டில், சீன டிஜிட்டல் நிறுவனமான ஹவாய், சீனாவில் உள்ள கிங்டாவோ உப்பு-கார சகிப்புத்தன்மை கொண்ட அரிசி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்திற்குள், குளோபல் கூட்டுக் கண்டுபிடிப்பு மையத்தின் விவசாய இணையத்தை அமைத்தது. இந்த மையம் விவசாயத்தில் வளமான மண்வளம் குறித்து ஆய்வு செய்யும் மையம். மேலும் IoT, Big Data மற்றும் cloud computing மூலம் விவசாயப் பிரச்னைகளை நுணுக்கமாகத் தீர்வு காணுவதில் கவனம் செலுத்தும் என்கிறார்கள்.

 

அமெரிக்காவில், கூகிளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் இன்க், விவசாயிகள் வணிக வலையமைப்பு மற்றும் போவரிப் பண்ணைகள் போன்ற தொடக்க நிறுவனங்களில் முதலீடுகளைச் செய்கிறது என்றும் தெரிவிக்கிறார்கள். ஆக உலக அளவில் விவசாயமும் உணவு உற்பத்தி, விலை, பகிர்வு போன்றவை ஒரு சில பெரு நிறுவனங்களின் கையில் குவிகிறது என்பதை எடுத்துக்காட்டு கிறார்கள். அதனால் சுற்றுச்சூழலில் என்னென்ன கேடுகள் நிகழ இருக்கிறன என்பதைப் பார்ப்போம்.

 

4.     சீர்கெடும் சுற்றுச் சூழல்

 

நான் பள்ளி மாணவனாக இருந்த போது, 1960, 70 களில், மழை வருவதற்கு முன்பு ஈசல் பறக்கும். இருட்டிக் கொண்டு வரும். காலத்தில் மழை பெய்யும். மழை பெய்து முடிந்ததும் மண்புழுக்கள் நெளியும். சிவப்பு நிற பட்டுத்துணியைப் போர்த்தி இருக்கும் பூச்சிகள் ஊர்ந்து வரும். தட்டான்களும் வண்ணத்துப்பூச்சிகளும் வலம் வரும். வெட்டுக்கிளிகள் வந்து செடிகளில் உட்காரும். தேனீக்கள் ரீங்காரமிடும். பூரான்களும் புழுக்களும் மண்ணைக் குடையும். மண் உருட்டிப் பூச்சி உருண்டு வரும். தேளும் சிலந்தியும் கரையானும் கண்ணில் படும். குருவியும் குயிலும் வானில் பறக்கும். பொன்வண்டு வந்து அழகு காட்டும். பிள்ளைப் பூச்சி, துளை போடும் வண்டு என்று தோட்டம் முழுக்க பூச்சிகள் உலகமாக இருக்கும். கரையான் வீடு கட்டும். தவளைச் சத்தம் காதைப் பிளக்கும். பாம்புகள் கவனமாய் ஊரும். இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.

 

அவற்றிற்கு என்ன ஆச்சு? எங்கே போயின? நாற்பது ஐம்பது வருடங்களில் இவ்வளவு மாற்றங்களா? இவற்றுக்கெல்லாம் காரணம் என்ன? என்று உங்களுக்குத் தெரியும். ஆனால் உச்சக்கட்ட காட்சியே இனிதான் வரப்போகிறது. ஏரிகளும், கண்மாய்களும், குளங்களும், குட்டைகளும், வயல்களும் வாய்க்கால்களும் தண்ணீர் நிறைந்து வழிந்து நின்ற காட்சி மறையும் காலம் நெருங்கிக்கொண்டிருக்கிறது.

 

இந்தியாவில், தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (NGT) கண்காணிப்புக் குழு சமீபத்தில் பஞ்சாபின் நிலத்தடி நீர் 2039 ஆம் ஆண்டுக்குள் 980 அடிக்கும் கீழே செல்லும் என்று அறிவித்தது. இப்படிப்பட்டச் சூழலில் சுற்றுச்சூல் அமைப்புகளைச் சீர்குலைக்கும் தீவிர விவசாய நடைமுறைகளை, செயற்கை நுண்ணறிவுத் தொழிற்நுட்பம் ஊக்குவிக்கும். நீர், மண் மற்றும் ஆற்றல் வளங்களை அதிகமாகச் சுரண்டும். அது நீண்டகால சுற்றுச்சூழல் சீரழிவுக்கு வழிவகுக்கும். வறட்சியால் பாதிக்கப்பட்டப் பகுதிகளில், செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் நீர்ப்பாசன முறைகளை அதிகமாகப் பயன்படுத்துவது நிலத்திடி நீரை விரைவாகக் குறைத்து, பாலைவனமாக்கலை ஏற்படுத்தி, எதிர்காலத்தில் விவசாயமே இல்லாத நிலையை உருவாக்கலாம். (Gupta, 2022)[19]

 

குஜராத்தில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த நீர்ப்பாசன முறைகளை அதிகமாகப் பயன்படுத்துவது, அதிகப்படியான நிலத்தடி நீரை உறிஞ்சுவதற்கு வழிவகுத்துள்ளது. இது இப்பகுதியில் நீண்டகால விவசாய நிலைத்தன்மையை அச்சுறுத்துகிறது. தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி போன்ற பகுதிகளில், வாழை சாகுபடிக்குச் செயற்கை நுண்ணறிவு பரிந்துரைக்கப்பட்ட ஒற்றைப் பயிர் சாகுபடி முறைகள் மண் ஊட்டச்சத்து குறைவதற்கு வழிவகுத்து, காலப்போக்கில் விவசாய நிலங்களின் வளத்தைக் குறைத்துள்ளன. பிரியங்கா சங்கர் வெளியிட்டுள்ள ‘விளைச்சலை அதிகரிக்கவும், வளங்களை நிர்வகிக்கவும், பூச்சிகளைக் குறைக்கவும் AI மற்றும் ட்ரோன்களைப் பயன்படுத்தி விவசாயம் செய்தல்’ என்கிற ஆய்வுக் கட்டுரையில்[20] விவசாயத்தில் எப்படி செயற்கை நுண்ணறிவு தொழிற்நுட்பம் புகுந்துள்ளது என்று ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளார்.

 

கேரள மாநிலத்தில் அத்தானி என்ற இடத்தில் கேரள வேளாண் இயந்திரக் கழகம் லிமிடெட் (KAMCO)-க்குச் சொந்தமாக பல ஏக்கர் நெல் வயல் இருக்கின்றன. அதில் ட்ரோனின் சென்சார்கள் கொண்டு நெல் வயலை அளக்கிறார்கள்.  பிறகு ட்ரோனில் பொருத்தப்பட்ட 10 லிட்டர் தொட்டியில் உரத்தை ஊற்றி வானத்தில் பறக்கவிட்டு, உரத்தைத் தெளிக்கிறார்கள். மூன்று நான்கு நாட்கள் வேலையாட்கள் செய்வதை இரண்டு மூன்று மணி நேரத்தில் செய்து முடிக்கிறோம் என்று மகிழ்ச்சியுறுகிறார்கள். அதே போல கர்நாடக மாநிலத்தில் நடப்பவற்றையும் வெளியிட்டுள்ளார். சிக்பால்பூர் மாவட்டத்தில் Fasal IoT என்கிற செயற்கை நுண்ணறிவுக் கருவியை அறிமுகப்படுத்தி யுள்ளார்கள். ஒரு விவசாயி அந்தக் கருவியைத் தன் மொபைல் போனோடு இணைத்துவிடுகிறார்.  அது “இன்றைக்கு வயலுக்குத் தண்ணீர் விடவேண்டாம். மேலே காய்ச்சல் போல இருக்கிறது. ஆனால் உள்ளே போதுமான ஈரத்தன்மை இருக்கிறது” என்று அறிவிக்கிறது. அதைக் கேட்டு விவசாயி நடக்கலாம்.

 

அமெரிக்காவில் உள்ள மாசாசுட்ஸ் பல்கலைகலைக்கழக ஆராய்ச்சியாளர் கள் செய்த ஆய்வில் ஓர் அதிர்ச்சி உண்மையைக் கண்டுபிடித்தனர். ஒரு செயற்கை இயந்திரத்திற்கு மொழி சொல்லிக்கொடுப்பதற்கு எவ்வளவு மின்சாரமும் ஆற்றலும் தேவை என்று கணக்கிட்டார்கள். கிட்டத்தட்ட மூன்று லட்சம் (3,00,000) கிலோ கார்பன் டை ஆக்சைடு உமிழ்வை அது காட்டியது. அவ்வளவு கார்பன் தடம் (Carbon Footprint) தேவைப்பட்டால் அது காலப்போக்கில் மிகப்பெரிய சூற்றுச்சூழல் சீரழிவிற்கு அடிவகுக்கும் என்று முடிவுக்கு வந்தார்கள் என்று Nature Machine Intelligence[21] என்கிற ஆய்வுப் பத்திரிக்கையில் Dhar.P எழுதுகிறார்.

 

செயற்கை நுண்ணறிவு விவசாயம் தீவிரமான விவசாயம். அது எதிர்மறையான சுற்றுச்சூழல் விளைவுகளை ஏற்படுத்தும். பூச்சிக்கொல்லிகள் மற்றும் உரங்களின் பயன்பாடு அதிகரிக்கும். மண்வளம் குறையும். பல்லுயிர் இழப்புகள் ஏற்படும் என Meghwanshi, Sunil[22] தன் ஆய்வுக்கட்டுரையில் குறிப்பிடுகிறார்.

 

ஆக, நிலத்தடி நீர் குறைந்து பாலவைனமாவதும், அதிக கார்பன் தடத்திற்கு வழிகோலுவதும், மண்வளம் குறைந்து பல்லுயிர் இழப்புகளைக் கொடுப்பதுமாக செயற்கை நுண்ணறிவு விவசாயம் இருக்கும் என்று தெரிந்துக்கொள்ளலாம்.

 

5.     இணைய வழி சைபர் தாக்குதல்களால் பொருளாதார உறுதியற்ற தன்மை உருவாகும்.

 

சைபர் தாக்குதல் என்பது தனிநபர்கள் அல்லது குழுக்கள், கணினி அமைப்புகள்  மற்றும் இணைய வலைத்தளத்தின் மீது நடத்துகிற தாக்குதல். அதன் இரகசியத் தன்மையை உடைப்பதே அவர்களின் நோக்கம். டிஜிட்டல் அமைப்புகள் மீது நடக்கும் அப்படிப்பட்ட பாதிப்புகளைப் பயன்படுத்தி, முக்கியமான தகவல்களைத் திருடுவார்கள். இலகுவாக நடக்கும் செயல்பாடு களைச் சீர்குலைப்பார்கள். அல்லது அங்கீகரிக்கப்படாமலேயே டிஜிட்டல் அமைப்புகளின் தரவுகளை அணுகிப் பெறுவார்கள்.

 

அப்படிப்பட சைபர் தாக்குதல்கள் செயற்கை நுண்ணறிவு தொழிற் நுட்பங்களுக்கும் நடக்கின்றன. அப்படிப்பட்ட தாக்குதல்கள் நடந்தால் என்னென்ன நடக்கும். விவசாய நடவடிக்கையை நாசம் செய்யலாம். உணவு உற்பத்தி மற்றும் விநியோக சங்கிலிகள் சீர்குலைந்துப் போகும். சைபர் தாக்குதல் செய்பவர், உணவு விலைகளில் மாற்றம் செய்யலாம். உலகளாவிய உணவுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் செய்யலாம். இவை எல்லாம் பொருளாதார நிச்சயமற்ற தன்மையை உருவாக்கும்.

 

எப்படியெல்லாம் சைபர் தாக்குதல் நடக்க வாய்ப்பிருக்கிறது?

 

·       நீர்பாசன முறையைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரலாம். ஈரப்பதத் தரவை மாற்றிவிடலாம். அதனால், தண்ணீரைப் பாய்ச்சாமல் காய வைக்கலாம். அல்லது அதிகமாகத் தண்ணீரை விட்டுப் பாழாக்கலாம்.

·       பூச்சி கொல்லியைத் தெளிக்கும் ட்ரோன்களைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரலாம். பூச்சி இல்லாத இடத்தில் பூச்சிக்கொல்லியைத் தெளித்து வீணாக்கலாம். பூச்சிகள் இருக்கும் இடத்தில் தெளிக்காமல் பயிரை சேதப்படுத்தலாம். அதிகமாகத் தெளித்து நட்டத்தை உண்டு பண்ணலாம்.

·       வயலில் உள்ள பயிர்களுக்கு வரும் நோய்களை முன்பே கண்டறியும் இயந்திரங்களைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரலாம். தவறான தரவுகளைக் கொடுக்கலாம். அதனால் நோய் முற்றி நட்டம் வரலாம்.

·       சந்தையை ஆய்வு செய்யும் இயந்திரங்களைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரலாம். அதன் மூலம் உற்பத்திப் பொருட்களின் விலைகளை ஏற்றியோ, இறக்கியோ பொருளாதார நிச்சயமற்றத் தன்மையைக் கொண்டுவரலாம்.

 

எடுத்துக்காட்டாக, 2020 இல் ஆஸ்திரேலியாவில் என்ன நடந்தது? உலகின் மிகப்பெரிய இறைச்சிப் பதப்படுத்தும் நிறுவனங்களில் ஒன்றான JBS நிறுவனத்தில் சைபர் தாக்குதல் நடந்தது. அது செயற்கை நுண்ணறிவால் இயக்கப்பட்ட செயல்பாடுகளைச் சீர்குலைத்தது. அதனால் உணவு விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டு உணவுப் பற்றாக்குறை ஆனது.

 

அதே போல் தான் இஸ்ரேலிலும் 2022 ஆம் ஆண்டு நடந்தது. பல இஸ்ரேலியப் பண்ணைகள் நீர்ப்பாசனத்திற்காகச் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துகின்றன. சைபர் தாக்குதல் நடத்துபவர்கள் அதைக் குறிவைத்தார் கள். அது பயிர்விளைச்சலை வெகுவாகப் பாதித்தது. Chrysanthos Maraveas[23] மற்றும் குழுவினர் வெளியிட்ட “விவசாயத்தில் சைபர் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் தணிப்பு நடவடிக்கைகள் 4.0 மற்றும் 5.0” என்ற ஆய்வுக்கட்டுரையில் பலவித ஆபத்துக்களை எடுத்துரைக்கின்றனர்.

 

·       சைபர் குற்றவாளிகள் விவசாய நிறுவனங்களின் பணத்தையும் வணிக இரகசியங்கள், அறிவுசார் சொத்துக்கள் மற்றும் பிற நிலையற்ற சொத்துக்களையும் திருடுகிறார்கள்.

·       சைபர் தாக்குதல்கள் பண்ணைகளில் வெப்பமூட்டும் மற்றும் குளிரூட்டும் அமைப்புகளின் ரிமோட் கண்ட்ரோல் போன்ற ஸ்மார்ட் விவசாய அமைப்புகளின் செயல்பாடுகளில் தலையிடக்கூடும்.

·       சமீபத்திய ஆண்டுகளில் சைபர் தாக்குதல்களால் உலகளாவிய தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்த சில விவசாய நிறுவனங்களில் மிகப்பெரிய இறைச்சிப் பொதி நிறுவனங்களில் ஒன்றான JBS, லயன் என்ற ஆஸ்திரேலிய பான நிறுவனம் மற்றும் புளோரிடா நீர் அமைப்பு ஆகியவை அடங்கும். இதை ஏற்கனவே நாம் குறிப்பிட்டோம்.

·       இப்படி ஏராளமான அச்சுறுத்தல்கள் காரணமாக, சைபர் பாதுகாப்பு விவசாயிகளுக்குக் குறிப்பிடத்தக்க தரவு மற்றும் நிதி இழப்புகளை ஏற்படுத்துகிறது என்பதே இதன் நேரடி உட்குறிப்பு.

 

தெலுங்கானா மாநிலத்தில் செயற்கை நுண்ணறிவால் இயங்கும் உணவு விநியோகச் சங்கிலி அமைப்பின் மீதான சைபர் தாக்குதல், விவசாய விளைபொருட்களின் விநியோகத்தைச் சீர்குலைத்து, உள்ளூர் சந்தைகளில் தற்காலிக உணவுப் பற்றாக்குறையை ஏற்படுத்தியது.

 

தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்தில் செயற்கை நுண்ணறிவால் கட்டுப்படுத்தப்பட்ட நீர்ப்பாசன அமைப்புகளைக் குறிவைத்துச் சைபர் தாக்குதல் விடுப்போர், நீர் விநியோக அட்டவணைகளை கையாள்வதன் மூலம் பயிர் விளைச்சலை அச்சுறுத்தினர். இது உணவு உற்பத்தி முறைகளின் பாதிப்பு குறித்த கவலைகளை எழுப்பியது.

 

முடிவாக...

 

விவசாயம் மற்றும் உணவு முறைகளில் செயற்கை நுண்ணறிவு (AI) ஒருங்கிணைப்பு உற்பத்தித்திறன், செயல்திறன் மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைக் கொண்டு வந்துள்ளதாக அதன் வரவை ஆதரிப்போர் கூறுகின்றனர். விவசாயத்தைத் துல்லியமாகச் செய்யமுடியும் என்றும், அறிவுபூர்வ பாசன முறையை வைத்துக்கொள்ள முடியும் என்றும் சொல்கின்றனர். இன்றைக்கு உலகம் எதிர்நோக்கும் உணவுப் பாதுகாப்பு, காலநிலை மாற்றம், இயற்கை வளங்களின் இழப்பு ஆகியவற்றிற்குச் செயற்கை நுண்ணறிவு தான் தீர்வு என்றும் நெஞ்சு நிமிர்த்துகின்றனர்.

 

இருப்பினும் மேற்குறிப்பிட்ட நன்மைகள் கணிசமான அபாயங்களையும் நெறிமுறைச் சிக்கல்கள்களையும் கொண்டு வருகின்றன என்பதை இந்த ஆய்வறிக்கை ஆராய்ந்து சொல்லியிருக்கிறது. இதிலிருந்து ஐந்து முக்கிய பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.

 

செயற்கை நுண்ணறிவு பெற்ற ஆட்டோமேஷன் உற்பத்தித்திறனை அதிகரிக்கவும் தொழிலாளர் செலவுகளைக் குறைக்கவும் முடியும் என்றாலும், மில்லியன் கணக்கான விவசாயத் தொழிலாளர்கள் வேலையில்லாமல் போகும் அபாயம் உள்ளது. செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு சார்ந்த விவசாய முறைகளை நம்பியிருப்பது, பல நூற்றாண்டுகளாக உருவாகியுள்ள பாரம்பரிய அறிவை ஓரங்கட்டுகிறது. பெரிய நிறுவனங்களின் கைகளில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்கள் இருப்பது அறவழி விவசாயத்தை, விவசாயிகளின் தற்சார்பை, சுயாட்சியை, சமத்துவத்தை அழிக்குமோ என்கிற கவலையை எழுப்புகிறது. தீவிரப்படுத்தப்பட்ட விவசாய நடைமுறைகளை ஊக்குவிப்பதில் செயற்கை நுண்ணறிவின் பங்கு குறிப்பிடத்தக்க அளவில் இருக்கிறது. அது ஒற்றைப் பயிர் சாகுபடி மற்றும் வளங்களை அதிகமாகப் பிரித்தெடுப்பதை ஊக்குவிக்கிறது. மண் வளம் மற்றும் நிலத்தடி நீர் இருப்பை அச்சுறுத்துகிறது.

 

விவசாயத்தில் செயற்கை நுண்ணறிவில் இயங்கும் அமைப்புகளை நம்பியிருப்பது அதிகரித்து வருவது உணவு உற்பத்தி மற்றும் விநியோகத்தை சைபர் தாக்குதல்களுக்கு ஆளாக்குகிறது.

 

இங்கு வழங்கப்பட்ட கண்டுபிடிப்புகள், விவசாயம், உணவு மற்றும் மனிதகுலத்தில் செயற்கை நுண்ணறிவு ஒருங்கிணைப்புக்கு ஒரு முழுமையான அணுகுமுறையை ஏற்றுக்கொள்வதன் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. அது மனிதர்களை மையப்படுத்திய அணுகுமுறை அல்லாமல், பல்லுயிர் சூழலுக்கு உகந்த, தற்சார்புள்ள, நீடித்த நிலைத்தத்தன்மை கொண்ட அணுகுமுறையாக இருக்கவேண்டும். சமூக, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் பரிமாணங்களைக் கருத்தில் கொண்டு அதைப் பொறுப்புடன் செயல்படுத்த வேண்டும். சிறு விவசாயிகள் பின்தங்கியிருக்காமல் இருப்பதை உறுதிசெய்து செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களை ஊக்குவிக்கும் கொள்கைகளை அரசாங்கங்கள் உருவாக்க வேண்டும்.

 

செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் விவசாயத்தை நோக்கிய பயணம் மகத்தான ஆற்றலைக் கொண்டதா? அல்லது சவால்கள் நிறைந்ததா? உலக அளவிலும், இந்தியா மற்றும் தமிழ்நாட்டின் அளவிலும் சொல்லப்பட்ட எடுத்துக்காட்டுகள், இந்தச் சவால்களைத் திறம்பட வழிநடத்த அரசாங்கங்கள், தனியார் துறைகள், விவசாயிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களிடையே இருக்க வேண்டிய ஒத்துழைப்பை விளக்குகின்றனவா?

 

கடந்த கால அனுபவங்களிலிருந்து கற்றுக்கொள்வதன் மூலமும், புதுமைகளைப் பொறுப்புடன் ஏற்றுக்கொள்வதன் மூலமும், கூட்டு முயற்சிகளின் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலமும் பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழலைப் பொறுத்தவரை, விவசாயம், உணவு அமைப்புகள் மற்றும் மனிதகுலத்திற்கு மட்டுமல்லாமல் பல்லுயிர் சூழலுக்கும் நிலையானதும், சமமானதும் பாதுகாப்பானதுமான எதிர்காலத்தை உருவாக்கச் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த வேண்டும்.

 

அப்பொழுது, பசுமைப் புரட்சியில் வேட்டியும் சட்டையும் பறி போனது. இப்பொழுது, செயற்கை நுண்ணறிவு தொழிற்நுட்பத்தில் கோவணமும் முண்டாசும் காணாமல் போக விடக்கூடாது. அல்லவா?

 

சாத்துணைகள்

 

1.    FarmBeats: AI, Edge & IoT for Agriculture. Research for Industry. Microsoft. Retrived from https://www.microsoft.com/en-us/research/project/farmbeats-iot-agriculture/

2.    Ellis, Jack (2020), Microsoft launches agritech startup scheme in India. AFN, Retrieved from https://agfundernews.com/microsoft-launches-agritech-startup-scheme-in-india

3.    Our mission. Beyond Meat. Retrieved from https://www.beyondmeat.com/en-US/mission

4.    Newton Peter , Blaustein-Rejto Daniel. (2021). ‘Social and Economic Opportunities and Challenges of Plant-Based and Cultured Meat for Rural Producers in the US. Frontiers in Sustainable Food Systems, 5, Retrieved from https://www.frontiersin.org/journals/sustainable-food-systems/articles/10.3389/fsufs.2021.624270

5.    ABUNDANT Robotic apple picker, Sustainable Food System, Innovation Platform, Retrieved from https://www.smartchain-platform.eu/en/innovation/abundant-robotic-apple-picker

6.    Devanesan, Joe. (2020). Japan agriculture crunch – can AI- powered autonomous tractors help?. Techwire Asia. Retrieved from https://techwireasia.com/2020/10/japan-agriculture-crunch-can-ai-powered-autonomous-tractors-help/.

7.    Meghwanshi, Sunil. (2024). Review Paper: Disadvantages of Artificial Intelligence in Agriculture. 10.13140/RG.2.2.23154.72642. Retrieved from https://www.researchgate.net/publication/379539289_Review_Paper_Disadvantages_of_Artificial_Intelligence_in_Agriculture

8.    AI in Agriculture: Its Pros and Cons. Solex. Blog. Retrieved from https://solexcorp.com/Blog/Post/389/AI-in-Agriculture-Its-Pros-and-Cons

9.    Ranjini, S. et. al. (2024). The future of farming: Integrating AI Technologies in Agricultural Systems. Nanotechnology Perceptions. ISSN 1660-6795. 20 No. S14 Pp.3855-3863

10.  Heldreth, Courtney et al. (2021). What does AI mean for smallholder farmers? A proposal for farmer-centered AI Research. XXVIII.4 July-August. Interactions. Pp. 56. Retrieved from https://interactions.acm.org/archive/view/july-august-2021/what-does-ai-mean-for-smallholder-farmers#R1

11.  Okengwu U. A. et. al. (2023). Environmental and Ethical Negative Implications of AI in Agriculture and Proposed Mitigation Measures. Scientia Africana. Vol. 22 (No.1), April, 2023. Pp 141-150. https://dx.doi.org/10.4314/sa.v22i1.13 Nigeria ISSN 1118 – 1931.

12.  Davidson, Jason. (2024). Bayer, Monsanto and Big Data: Who will control our food system in the era of digital agriculture and mega-mergers?. Food and Agriculture. Friends of the Earth. Retrieved from https://foe.org/blog/bayer-monsanto-digital-agriculture/

13.  Farmers in India are using AI for agriculture – here’s how they could inspire the world. (2024). World Economic Forum. Retrieved from https://www.weforum.org/stories/2024/01/how-indias-ai-agriculture-boom-could-inspire-the-world.

14.  Artificial Intelligence to advise farmers on pests and diseases in crops. (2020).  Indiai. Retrieved from https://indiaai.gov.in/case-study/artificial-intelligence-to-advise-farmers-on-pests-and-diseases-in-crops?

15.  Dara R. et. al. (2022). Recommendations for ethical and responsible use of artificial intelligence in digital agriculture. Front Artif Intell. 5:884192. doi: 10.3389/frai.2022.884192. PMID: 35968036; PMCID: PMC9372537.

16.  Sparrow, R., Howard, M., & Degeling, C. (2021). Managing the risks of artificial intelligence in agriculture. NJAS: Impact in Agricultural and Life Sciences, 93(1), 172–196. https://doi.org/10.1080/27685241.2021.2008777

17.  Gupta, Vivek. (2022). Accelerating rate of groundwater depletion in Punjab, worries farmers and experts. The India Water Story. Mongabay. Retrieved from https://india.mongabay.com/2022/06/accelerating-rate-of-groundwater-depletion-in-punjab-worries-farmers-and-experts/

18.  Gurumurthy, Anita & Bharthur, Deepti. (2019). Taking stock of Artificial Intelligence in Indian Agriculture. Artificial Intelligence in India. Vol.3. Friedrich Ebert Stiftung. IT for change.

19.  Dhar, P. (2020). The Carbon Impact of Artificial Intelligence. Nature Machine Intelligence. 423–425.

20.  Shankar, Priyanka. (2024). Farming with AI and drones to increase yields, manage resources and reduce pests. Mongabay. Retrieved from https://india.mongabay.com/2024/04/farming-with-ai-and-drones-to-increase-yields-manage-resources-and-reduce-pests/

21.  Meghwanshi, Sunil. (2024). Review Paper: Disadvantages of Artificial Intelligence in Agriculture. 10.13140/RG.2.2.23154.72642.

22.  Chrysanthos Maraveas, et. al. (2024). Cybersecurity threats and mitigation measures in agriculture 4.0 and 5.0, Smart Agricultural Technology, Volume 9, 100616, ISSN 2772-3755, https://doi.org/10.1016/j.atech.2024.100616.


[1] FarmBeats: AI, Edge & IoT for Agriculture. Research for Industry. Microsoft.

[2] Ellis, Jack (2020), Microsoft launches agritech startup scheme in India. AFN

[3] Our mission. Beyond Meat. Retrieved from https://www.beyondmeat.com/en-US/mission

[4] Newton Peter, Blaustein-Rejto Daniel. (2021). ‘Social and Economic Opportunities and Challenges of Plant-Based and Cultured Meat for Rural Producers in the US. Frontiers in Sustainable Food Systems.

[5] ABUNDANT Robotic apple picker, Sustainable Food System, Innovation Platform

[6] Devanesan, Joe. (2020). Japan agriculture crunch – can AI- powered autonomous tractors help?  

 Techwire Asia.

[7] Meghwanshi, Sunil. (2024). Review Paper: Disadvantages of Artificial Intelligence in Agriculture.

[8] AI in Agriculture: Its Pros and Cons. Solex. Blog.

[9]  Ranjini, S. et. al. (2024). The future of farming: Integrating AI Technologies in Agricultural Systems.

[10] Jarinaa, B & M.Manida, Dr. (2023). A Study on Pros and Cons of AI Technology Used Agri Farming  

  in Tamil Nadu. 4. 69-7

[11] Heldreth, Courtney et al., (2021). What does AI mean for smallholder farmers? A proposal for farmer-

  centered AI Research

[12] Okengwu U. A. et. al. (2023). Environmental and Ethical Negative Implications of AI in Agriculture and Proposed Mitigation Measures.

[13] Farmers in India are using AI for agriculture – here’s how they could inspire the world. (2024). World Economic Forum.

[14] Artificial Intelligence to advise farmers on pests and diseases in crops. (2020).  Indiai.

[15] Davidson, Jason. (2024). Bayer, Monsanto and Big Data: Who will control our food system in the era

  of digital agriculture and mega-mergers?

[16] Dara R. et. al. (2022). Recommendations for ethical and responsible use of artificial intelligence in  

  digital agriculture.

[17] Sparrow, R., Howard, M., & Degeling, C. (2021). Managing the risks of artificial intelligence in  

  agriculture. 

[18] Gurumurthy, Anita & Bharthur, Deepti. (2019). Taking stock of Artificial Intelligence in Indian  

  Agriculture.

[19] Gupta, Vivek. (2022). Accelerating rate of groundwater depletion in Punjab, worries farmers and  

  experts.

[20] Shankar, Priyanka. (2024). Farming with AI and drones to increase yields, manage resources and

    reduce pests.

[21] Dhar, P. (2020). The Carbon Impact of Artificial Intelligence.

[22] Meghwanshi, Sunil. (2024). Review Paper: Disadvantages of Artificial Intelligence in Agriculture.

[23] Chrysanthos Maraveas, et. al. (2024). Cybersecurity threats and mitigation measures in agriculture 4.0  

  and 5.0

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

சாத்துணைகள்

 

1.       FarmBeats: AI, Edge & IoT for Agriculture. Research for Industry. Microsoft. Retrived from https://www.microsoft.com/en-us/research/project/farmbeats-iot-agriculture/

2.       Ellis, Jack (2020), Microsoft launches agritech startup scheme in India. AFN, Retrieved from https://agfundernews.com/microsoft-launches-agritech-startup-scheme-in-india

3.       Our mission. Beyond Meat. Retrieved from https://www.beyondmeat.com/en-US/mission

4.       Newton Peter , Blaustein-Rejto Daniel. (2021). ‘Social and Economic Opportunities and Challenges of Plant-Based and Cultured Meat for Rural Producers in the US. Frontiers in Sustainable Food Systems, 5, Retrieved from https://www.frontiersin.org/journals/sustainable-food-systems/articles/10.3389/fsufs.2021.624270

5.       ABUNDANT Robotic apple picker, Sustainable Food System, Innovation Platform, Retrieved from https://www.smartchain-platform.eu/en/innovation/abundant-robotic-apple-picker

6.       Devanesan, Joe. (2020). Japan agriculture crunch – can AI- powered autonomous tractors help?. Techwire Asia. Retrieved from https://techwireasia.com/2020/10/japan-agriculture-crunch-can-ai-powered-autonomous-tractors-help/.

7.       Meghwanshi, Sunil. (2024). Review Paper: Disadvantages of Artificial Intelligence in Agriculture. 10.13140/RG.2.2.23154.72642. Retrieved from https://www.researchgate.net/publication/379539289_Review_Paper_Disadvantages_of_Artificial_Intelligence_in_Agriculture

8.       AI in Agriculture: Its Pros and Cons. Solex. Blog. Retrieved from https://solexcorp.com/Blog/Post/389/AI-in-Agriculture-Its-Pros-and-Cons

9.       Ranjini, S. et. al. (2024). The future of farming: Integrating AI Technologies in Agricultural Systems. Nanotechnology Perceptions. ISSN 1660-6795. 20 No. S14 Pp.3855-3863

10.      Heldreth, Courtney et al. (2021). What does AI mean for smallholder farmers? A proposal for farmer-centered AI Research. XXVIII.4 July-August. Interactions. Pp. 56. Retrieved from https://interactions.acm.org/archive/view/july-august-2021/what-does-ai-mean-for-smallholder-farmers#R1

11.      Okengwu U. A. et. al. (2023). Environmental and Ethical Negative Implications of AI in Agriculture and Proposed Mitigation Measures. Scientia Africana. Vol. 22 (No.1), April, 2023. Pp 141-150. https://dx.doi.org/10.4314/sa.v22i1.13 Nigeria ISSN 1118 – 1931.

12.      Davidson, Jason. (2024). Bayer, Monsanto and Big Data: Who will control our food system in the era of digital agriculture and mega-mergers?. Food and Agriculture. Friends of the Earth. Retrieved from https://foe.org/blog/bayer-monsanto-digital-agriculture/

13.      Farmers in India are using AI for agriculture – here’s how they could inspire the world. (2024). World Economic Forum. Retrieved from https://www.weforum.org/stories/2024/01/how-indias-ai-agriculture-boom-could-inspire-the-world.

14.      Artificial Intelligence to advise farmers on pests and diseases in crops. (2020).  Indiai. Retrieved from https://indiaai.gov.in/case-study/artificial-intelligence-to-advise-farmers-on-pests-and-diseases-in-crops?

15.      Dara R. et. al. (2022). Recommendations for ethical and responsible use of artificial intelligence in digital agriculture. Front Artif Intell. 5:884192. doi: 10.3389/frai.2022.884192. PMID: 35968036; PMCID: PMC9372537.

16.      Sparrow, R., Howard, M., & Degeling, C. (2021). Managing the risks of artificial intelligence in agriculture. NJAS: Impact in Agricultural and Life Sciences, 93(1), 172–196. https://doi.org/10.1080/27685241.2021.2008777

17.      Gupta, Vivek. (2022). Accelerating rate of groundwater depletion in Punjab, worries farmers and experts. The India Water Story. Mongabay. Retrieved from https://india.mongabay.com/2022/06/accelerating-rate-of-groundwater-depletion-in-punjab-worries-farmers-and-experts/

18.      Gurumurthy, Anita & Bharthur, Deepti. (2019). Taking stock of Artificial Intelligence in Indian Agriculture. Artificial Intelligence in India. Vol.3. Friedrich Ebert Stiftung. IT for change.

19.      Dhar, P. (2020). The Carbon Impact of Artificial Intelligence. Nature Machine

Intelligence. 423–425.

20.      Shankar, Priyanka. (2024). Farming with AI and drones to increase yields, manage resources and reduce pests. Mongabay. Retrieved from https://india.mongabay.com/2024/04/farming-with-ai-and-drones-to-increase-yields-manage-resources-and-reduce-pests/

21.      Meghwanshi, Sunil. (2024). Review Paper: Disadvantages of Artificial Intelligence in Agriculture. 10.13140/RG.2.2.23154.72642.

22.      Chrysanthos Maraveas, et. al. (2024). Cybersecurity threats and mitigation measures in agriculture 4.0 and 5.0, Smart Agricultural Technology, Volume 9, 100616, ISSN 2772-3755, https://doi.org/10.1016/j.atech.2024.100616.


 

16 views0 comments

Recent Posts

See All

Comments


JOBA Logo transperent_edited.png

Inspiring Natural Living

John Britto Academy

JOBA

Registered in Australia: ASIC under section 33(8) of BNR Act 2011
 

bottom of page