வலங்கைமான் புதுத்தெரு வீட்டிலிருந்து வெளியே வந்து, இடது பக்கமாக நடந்து மறுபடியும் இடது எடுத்தால், குடமுருட்டி ஆற்றுக்குப் போகும் வழி. அங்கு தான் அந்த ஆபத்தான நிகழ்வு நடந்தது.
அம்மா என்னையும் இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டு ஆற்றில் குளிக்க, அவரது நண்பர்களுடன் போவார்கள். வீட்டில் வலது பக்கம் ஒரு துணி வெளுக்கும் குடும்பம் இருந்தது. இடது பக்கம் யார் இருந்தார்கள் என ஞாபகம் இல்லை. எதிர் வீட்டில் வேம்பு வீடு. இது தவிர அம்மாவுக்கு, மீரா அம்மா சினேகிதம்.
ஆற்றுக்குப் போவதென்றால் நாலைந்து பேர் கூட்டமாகத்தான் போவார்கள். அன்றைக்கும் அப்படித்தான் போனோம். ஜூலி அக்காவும் எங்களோடு சேர்ந்துக் கொண்டார்.
சாமியார் மடம்
போகிற வழியில் ஒரு சாமியார் மடம் இருக்கும். அது கோயிலா அல்லது வெறும் சத்திரமா எனத் தெரியவில்லை. ஆனால் பிச்சைக்காரர்கள் நிறையப் பேர் அங்கு அமர்ந்திருப்பதை அடிக்கடிப் பார்த்திருக்கிறேன். அவர்களின் திருவோடு எனக்கு ரொம்பப் பிடிக்கும். வழவழவென்று இருக்கும். அதனுடைய வடிவமே கவர்ச்சிகரமாக இருக்கும். நீள் வட்ட வடிவத்தில் குழியில் சோறு, குழம்பு, காய்கறிகள் என எல்லாம் நிரம்பும்படி போதுமான இடம் இருக்கும். அவர்களுக்கு எப்படித்தான் அவ்வளவு அழகிய திருவோடு கிடைக்கிறதோ தெரியவில்லை. காவி உடை அணிந்து, திருநீறு பூசிக்கொண்டு கைத்தடிகளோடு, திருவோடு ஏந்தி வரும் போது அவர்கள் சாமியார்களா அல்லது பிச்சைக்காரர்களா என எப்பொழுதுமே குழம்பிப் போய்விடுவேன். தாடி மீசையோடு பார்க்கும் போது பயமாகவும் இருக்கும். ஆண் பிச்சைக்காரர்களைத்தான் அப்பொழுது பார்த்திருக்கிறேன். ஏன் பெண்களே இருப்பதில்லை?
காவி அணிந்து கால் கடுக்க நடப்பார் தெருவோடு - அவர்
கூவி அழைத்து ஏந்திட பிச்சைப் பாத்திரம் திருவோடு.
சீவி வாரா சிகை இருக்க சிலர் கொடுப்பார் அளவோடு -
பாவி நானும் செல்வேனோ பழகிட அவரோடு.
அப்பப்ப கவிதை முட்டிக்கொண்டு வருகிறது என்று சொன்னேன் அல்லவா! வந்து விட்டது.
அஞ்சு கண்ணன்
அக்காலத்தில் ‘அஞ்சு கண்ணன்’ என்கிறவனைப் பற்றி என்னிடம் சொல்லி இருக்கிறார்கள். நான் ஒழுங்காகச் சாப்பிடவில்லை என்றால், கலைமணி அக்காவோ (என் மூத்த அக்கா), அம்மாவோ, ஜூலி அக்காவோ ‘அஞ்சு கண்ணன் வருவான். புடிச்சி குடுத்திடவா’ என்று சொன்னால், பயந்து கொண்டு சாப்பிட்டு விடுவேன்.
‘அஞ்சு கண்ணன் வருவானா?’
‘ஆமா வருவான்.’
‘அவனுக்கு அஞ்சு கண்ணு இருக்குமா?’
‘ஆமா இருக்கும்.’
‘எப்ப வருவான்?’
‘நீ சாப்பிடலன்னா, ‘அஞ்சு கண்ணா வா!’ ன்னு கூப்பிட்டா வந்துருவான்.’
‘வந்து என்ன செய்வான்?’
‘நீ சொல்ற பேச்சை கேட்கலன்னா, ஒன்ன புடிச்சிட்டு போயிடுவான்.’
‘புடிச்சிட்டு போயி?’
‘புடிச்சிட்டு போயி லபக்குன்னு ஒன்ன தின்னுடுவான்.’
பால் சாதம்
அந்த நேரத்தில் என் வாய், பால் சோறு வாங்கிக் கொள்வதற்காக தானாகவே திறந்து விடும். நன்கு காய்ச்சிய பசும் பாலில் ஊறிய இளஞ்சூட்டுடனான, தஞ்சாவூர் பொன்னி அரிசியில் பொங்கிய சாதம், உதடுகளின் ஓரத்தில் வழிய வழிய வாயிக்குள் பக்குவமாக ஊட்டுவார்கள். அதை ஓரமாக அதக்கிக் கொண்டே,
‘அஞ்சு கண்ணன் இப்ப எங்க இருப்பான்?’
‘நீ நல்ல புள்ள…சொல்ற பேச்சை கேக்குற…குடுக்கற சாதத்தை வாங்கிக்கிற… அதனால அவன் வர மாட்டான்.’
‘வரமாட்டான்?’
‘வரமாட்டான்.’
பல தடவை அஞ்சு கண்ணன் தயவால் தான் சோறு இறங்கியது.
அதனால் தான், அந்த சாமியார்கள் மாதிரி உள்ள பிச்சைக்காரர்கள், அல்லது பிச்சைக்காரர்கள் மாதிரி உள்ள சாமியார்கள், ஆற்றுக்குப் போகும் வழியில் உள்ள மடத்தில் உட்கார்ந்திருப்பதைப் பார்க்கும் போது, அம்மாவின் மடியில் உட்கார்ந்திருந்தாலும் மனசு ‘திக், திக்’ கென்று இருக்கும். யாருக்காவது அஞ்சு கண்கள் இருக்கா எனப் பார்க்க என் இரண்டு கண்களும் அலை மோதும். அங்கு தான் அஞ்சு கண்ணனும் இருப்பானோ? எனத் தேடும். சாப்பிடமுடியாது என எப்பொழுதோ அடம் பிடித்ததற்கு, திடீரெனப் பாய்ந்து வந்து என்னைப் பிடித்து இழுத்துக் கொண்டு போய்விடுவானோ என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருக்கும் போதே குடமுருட்டி ஆறு வந்து விடும்.
குடமுருட்டி ஆறு
குடமுருட்டி ஆறு வலங்கைமானுக்கு ஒரு வரம். அது எங்கிருந்து வருகிறது எங்கே போகிறது என்றெல்லாம் அப்பொழுது எனக்குத் தெரியாது. இரண்டு கரைகளிலும் நாணல் அடர்ந்து இருக்கும். பெரிய அண்ணன்கள் ஆற்றில் முழுகி, நீந்தி இக்கரையிலிருந்து அக்கரைக்குச் சென்று நாணலில் பூத்து உள்ள வெள்ளை நிற ‘புசு, புசு’ பூக்களைப் பறித்து வருவார்கள்.
யார் முதலில் பறிப்பது என அவர்களுக்குள் பந்தயம் வைத்துக் கொண்டுதான் நீந்திப் போய் பறித்து வந்திருப்பார்கள் என நினைக்கிறேன். நாணலில் பூத்து உள்ள பூ, குதிரை வாலை நிமிர்த்தி நட்டமா நிக்க வச்சா எப்படி இருக்குமோ அப்படி இருக்கும். அரசர்கள் தங்கள் முண்டாசுகளில் அழகாக செருகி வைத்திருப்பார்களே அது போல. ஆனால் இது அதைவிடப் பெரிசாக இருக்கும். அதன் வனப்பே தனி. அதை நினைத்து உருகும் போது ஒரு புதுக்கவிதை எழுதிவிடுவோமே!
நாணல் பூவே!
தென்னங்கீற்றில் தேங்காய் துருவல்
செருகி வைத்தாற் போல்
பச்சைத் தண்டில் வெள்ளைச் சரவெடி நீ!
கோரையாறு ராஜா
சூடிக்கொண்ட மகுடம் நீ!
கன்னம் வருட
இயற்கை கொடுத்த இனிய பரிசு நீ!
போதும். போதும். கதைக்கு வருவோம். குடமுருட்டி ஆற்றுக்கு வந்துவிட்டோம். அந்த அபாயகரமான நிகழ்வுப் பற்றிச் சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது.
குளியல்
நாலைந்து படிகள் இருக்கும் என நினைக்கிறேன். என்னை கரையிலேயே இறக்கிவிட்டு அம்மா ஆற்றில் இறங்கினார்கள். அம்மாவோடு சேர்ந்து அவரது தோழிகளும் இறங்கினார்கள். குளிப்பதற்கு முன்பு பெரிய தேக்சா பானையில் கொண்டு வந்த அழுக்குத் துணிகளை துவைக்க ஆரம்பித்தார்கள்.
ஆஞாவோடு பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் வேலை செய்யும் நண்பர் பெயர் பன்னீர் செல்வம். அவரின் அப்பா பழனியப்பச் செட்டியார். தேங்காய் வியாபாரம். பன்னீர் செல்வத்தின் தங்கை மீரா. பன்னீர் செல்வம், மீரா அவர்களின் அம்மா, அதாவது பழனியப்பச் செட்டியாரின் மனைவி, எங்கள் அம்மாவின் தோழிகளில் ஒருவர். அவர் உடம்பு தாட்டியாக இருக்கும். அவர் சொன்னார்.
“கலைமணி அம்மா! (என் பெரிய அக்காவின் பெயரைச் சொல்லி என் அம்மாவை அப்படி அழைப்பது வழக்கம்.) இன்னக்கி தண்ணி தொறந்து விட்டானா என்னான்னு தெரியலை. பொல பொல’ன்னு அடிச்சிகிட்டு வருது.”
“ஆமா மீராம்மா! எப்பொழுதும் இடுப்பு அளவு இருக்கும். இப்ப நெஞ்ச மீறி தலைக்கு மேல போகும் போல இருக்கு.”
“நல்லது தான். வெள்ளாமைக்கு வேணுமில்ல.”
“அந்த சவுக்காரத்தை இங்க தூக்கிப் போடு”
“இந்தா! புடிச்சிக்க”
ஜூலி அக்காவைப் பார்த்து அம்மா
“ ஜூலிம்மா! தம்பியை பாத்துக்க…அப்படியே அந்த கல்லுல ஒக்காருங்க.”
கூச்சல்
அக்காவின் மடியில் உட்கார்ந்துக் கொண்டு, ஆற்றைத் தாண்டி உள்ள பச்சை வயல்களுக்கு மேல் பறந்து செல்கிற வெள்ளை கொக்குகளை பார்த்துக்கொண்டிருந்தேன். சூரியன் கிளம்பி மூணு நாலு மணி நேரம் ஆகிவிட்டதால், நல்ல வெயில். இருந்தாலும் வயல் வழி வந்த காற்று, நாணலைத் தாண்டி, ஆற்று நீரைக் கடந்து, உடலை வருடும் தென்றலாக எங்களைத் தீண்டிச் சென்றது.
திடீரென ஒரே கூச்சல்.
“அடியே! ஆத்துல அடிச்சுட்டுப் போறாடி” மீரா அம்மா தன் மருமகள் ஆற்றில் அடித்துப் போவதைப் பார்த்து அலறினார். உடனே தன் மருமகளைக் காப்பாற்ற, தானும் நீந்திச்சென்றார். என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? ஒரு மருமகளை ஒரு மாமியார் காப்பாற்றுவதா? அது அந்தக் காலம். ஒற்றுமையாக இருந்த காலம்.
பாவம். மீரா அம்மாவையும் ஆற்று வெள்ளம் அடித்துச் செல்ல, இருவரும் சற்றுத் தூரத்தில் இருந்த பாலத்தை நோக்கி அடித்துச் செல்லப்படுகிறார்கள்.
நட்பு
அதைப் பார்த்த எங்கள் அம்மா, அவர்கள் இருவரையும் காப்பாற்ற, தானும் அவர்களை நோக்கி நீந்துகிறார். நட்பின் அடையாளம். நண்பர்கள் ஓர் ஆபத்தில் இருக்கும் போது, பார்த்துக் கொண்டு சிவனே’ன்னு இருப்பது நட்பல்ல.
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு. (திருக்குறள் 788)
தான் அணிந்திருக்கும் ஆடை, சடாரென கீழே விழ, அதைப் படாரென கைகள் போய் பிடிப்பது போல், தன் நண்பன் ஒரு கஷ்டத்தில் இருக்கும் போது, விரைந்து சென்று உதவ வேண்டும் என திருவள்ளுவர் கூறுகிறார். இங்கேயோ, உடைகள் இழந்தும் நண்பர்களை காப்பாற்ற என் அம்மா விரைகிறார்.
ஆனால் என்னே! பரிதாபம். அம்மாவும் அடித்துச் செல்லப்படுகிறார்.
மூவரும் கரை புரண்டு ஓடும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுகிறார்கள். ஜூலி அக்கா என்னை தூக்கி கீழே போட்டுவிட்டு ஆற்றுக்குள் குதிக்கிறார். அக்காவுக்கு எட்டு வயசு இருக்கும். இளங்கன்று பயம் அறியாது என்பது போல, அம்மாவுக்கு ஓர் ஆபத்து என்றதும், ஒரே பாய்ச்சலாக, எட்டு வயசு சிறுமியாக இருந்தாலும், பயப்படாமல் குதிக்கிறார். அப்படி இப்படி நீந்தி போய் அம்மாவின் சேலையைப் பிடிக்கிறார். ஏறி முதுகில் உட்கார்கிறார்.
மீரா அம்மாவின் மருமகளைக் காப்பாற்ற மீரா அம்மா.
மீரா அம்மாவைக் காப்பாற்ற என் அம்மா.
என் அம்மாவைக் காப்பாற்ற என் அக்கா.
வெள்ளம்
நால்வரும் நுரைத்து வரும் வெள்ளத்தில் சில நேரம் தலை தெரிய, சில நேரம் தலை மறைய திக்கு முக்காடிக்கொண்டு இருக்கிறார்கள்.
நான் ‘ஓ’ வென, மூக்கொழுக அழுதுகொண்டே அவர்கள் போகும் பக்கும் கரையிலேயே நடக்கிறேன். கூட வந்தவர்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.
“ஏ! ஏய்…! ஏய்ய்ய்ய்!!!” எனக் கத்துகிறார்கள்.
“ அடிச்சிட்டு போறாடி”
“ ஐயோ! என்ன செய்யிறது?”
யார் நகர்ந்தாலும் அவர்களையும் அடிச்சிட்டு போகிற மாதிரி வெள்ளம். ஒரு பர்லாங்கு தூரம் அடித்துச் சென்று விட்டார்கள். இவர் அவரைப் பிடிக்க, இவரை இன்னொருத்தர் பிடிக்க, இன்னொருத்தரை மற்றொருவர் பிடிக்க, மூச்சுத் திணற, வெள்ளம் நால்வரையும் ஒரு வழிப் பண்ணாமல் விடமாட்டேன் என்று திமிற, இடமே அல்லோகலப் பட்டது.
பதட்டம்
கரையில் இருந்த கோரையை யாரோ பிடித்தார்கள். வழுக்கினாலும் பிடி நழுவ வில்லை. அம்மாவின் தலைமயிரை யார் கையோ பிடித்தது. அதற்குள் கரையில் கூட்டம் கூடிவிட்டது. எங்கும் பதட்டம். கூச்சல். குழப்பம்.
கூட்டத்துக்கிடையில் அவர்களது கால்களுக்கிடையில் புகுந்து நான் பார்க்கிறேன். கரையிலிருந்து அவர்களை கைநீட்டி தூக்க முடியாத அளவுக்கு ஆழம். பதட்டத்துடன் நேரம் கழிய, ஆஞாவின் அலுவலகத்திலிருந்து ஆஞாவோடு சேர்ந்து நாலைந்து பேர் வந்து விட்டார்கள். எப்படி அவர்களுக்குச் செய்தி போனது?
யாரோ இரண்டு மூன்று சேலைகளை ஒன்றாகச் சேர்த்து இறுகக் கட்டி மீரா அம்மாவிடம் தூக்கிப் போட்டார்கள். ஒரு முனையைப் பிடித்துக் கொள்ள இரண்டு மூன்று பேர் சேர்ந்து மேலே இழுத்தார்கள். ஒவ்வொருத்தராக மேலே வந்தார்கள்.
ஒரு பக்கம் ஆற்றில் வெள்ளம். இன்னொரு பக்கம் என் கண்களில் வெள்ளம். அட! என்ன உவமை. அவ்வப்போது ஒரு கவிஞன் என்னுள்ளிருந்து எட்டிப்பார்க்கிறான். கண்டு கொள்ளாதீர்கள்.
ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தோம்.ஆஞாவும் எங்களோடே இருந்து விட்டார்கள். அம்மாவுக்கு எப்பொழுதுமே மன தைரியம் அதிகம். எங்களைத் தேற்ற ஆரம்பித்துவிட்டார்கள். ஜூலி அக்காவை எல்லோரும் பாராட்டினார்கள்.
காவிரி ஆறு
அப்பொழுதெல்லாம் காவிரி ஆறு கரை புரண்டு ஓடும். குடமுருட்டி ஆறு காவிரி ஆற்றின் ஒரு கிளை ஆறு. கிளை ஆறுகள் செழிப்பாக பாயும். மாதம் மும்மாரி மழை பெய்யும். சொன்ன நேரத்தில் விவசாயிகளுக்கு தண்ணீர் இருக்கும். நிலத்தடி நீரை உறிஞ்சும் பம்பு செட்டுகள் கிடையாது. நதியிலிருந்து ஆறுகளுக்குப் பிரிந்து, வாய்க்காலில் வழிந்து ஓடி, வரப்புகளுக்கு அருகில் உள்ள சிறு வாய்க்கால்களுக்கு வரும் தண்ணீரை, ஏற்றம் வைத்து இறைத்து நெற்பயிர்களுக்குப் பாய்ச்சுவார்கள்.
அம்மா, ஆடு, இலை, ஏணிக்குப்பிறகு ‘ஏற்றம்’ என்றே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுத்தார்கள்.
இப்பொழுது அந்த குடமுருட்டி ஆறு வருடத்தில் பல மாதங்கள் வெறும் மணல் வெளியாய் கிடக்கிறது. அம்மா இப்பொழுது இறங்கினால் அடித்துச் செல்லப்படமாட்டார்.
வலங்கைமான் புதுத்தெரு வீட்டில் எங்கள் ஆஞாவின் தம்பியின் (ஜார்ஜ் சின்னாஞா அவர்களின்) கல்யாணம் நடந்தது. அதில் மறக்க முடியாத தருணம் என்ன தெரியுமா?
(தொடரும்)
Pictures Credit:
https://www.amarx.in/
https://www.youtube.com/watch?v=z60qXBjRuFI
http://foodstamil.blogspot.com/2018/05/milk-rice.html
http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=12533&id1=4&issue=20170818
https://www.thandoraa.com/
*****
留言