top of page
Writer's pictureJohn Britto Parisutham

உங்கள் குழந்தைகள் கற்றலில் ஆர்வம் செலுத்த 10 யோசனைகள்

Updated: Aug 18, 2021


Source: https://www.thehindu.com/

“ஐயா! இந்தக் கொரோனா காலத்துல பிள்ளைகள் 24 மணி நேரமும் வீட்டுல இருக்காங்க. பெற்றோர்களா நாம, அவங்க படிப்புக்கு உதவி செய்யத்தான் செய்றோம். ஆனா, அடிக்கடி கோபமும் எரிச்சலும் வந்துடுது. ஆசிரியர்கள் அதற்காக பயிற்சி பெற்றிருக்கிறார்கள். எங்களுக்கு அந்தப் பயிற்சி இல்லை. நாங்கள் வீட்டு வேலையையும் கவனிக்க வேண்டி இருக்கு. எங்கள் அலுவலக வேலையையும் செய்ய வேண்டி இருக்கு. லோக்டவுன் வேற. இந்தச் சூழல்ல, பிள்ளைகளை அவங்க படிப்புல ஆர்வம் செலுத்த ஏதாவது வழி இருந்தா சொல்லுங்க ஐயா!”


மலேசியாவில் உள்ள பண்டார் ஸ்ரீ செண்டாயன் தமிழ்ப்பள்ளியுடன், ஜோன் பிரிட்டோ அகாடமி இணைந்து நடத்துகிற “நானும் ஓர் ஆசிரியர் தான்” திட்டத்தின் முதல் கலந்துரையாடல் இயங்கலை வழி 2021 ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி நடந்தது. அந்தக் கலந்துரையாடலில் தான் பெற்றோர்கள் சிலர் மேற்கண்டவாறு கேட்டனர். அதன் விளைவாக கீழ்க்கண்ட 10 யோசனைகளை அவர்களுக்காக இங்கே குறிப்பிடுகிறேன்.

1. பரிசளியுங்கள்.

உங்களுக்கு யாராவது ஒருவர் பரிசு கொடுக்கும் போது எப்படி உணர்கிறீர்கள்? மகிழ்ச்சியாக உணர்கிறீர்கள். உங்கள் மேல் அவர் அக்கறையாக இருக்கிறரார் எனத் தெரிந்து சந்தோஷப்படுகிறீர்கள். உற்சாகம் கொள்கிறீர்கள். இல்லையா? அதே உணர்வை உங்கள் பிள்ளைகளுக்கும் கொடுக்கலாமே! ‘நீ இதைப் படித்து முடித்தால், இதைத் தருவேன். அல்லது இதைச் செய்ய அனுமதிப்பேன். அல்லது இங்கு அழைத்துப் போவேன்” எனச் சொல்லிப் பாருங்கள். இங்கு, லஞ்சம் கொடுத்து பிள்ளைகளை வீணடிப்பது என்கிற வாதம் செல்லாது. தேர்வில் பதிலை சரியாக எழுதினால், அதிக மார்க்குகள் கிடைக்கிறதே. ஒரு செயலுக்கு எதிர் விளைவு இருக்கும். அந்த எதிர் விளைவை எதிர்பார்த்து இப்பொழுது அந்தச் செயலை செவ்வனே செய்வதற்கு அது உதவலாம். ஓட்டப்பந்தயத்தில் ஓடி முதலில் வந்தால் தங்கப்பதக்கம் தருகிறார்களே!


இந்த வீட்டுப் பாடத்தை செய்து முடித்தால், இந்த பிடித்த உணவை செய்து தருகிறேன் என்று சொல்லிப் பாருங்கள்.


பரிசாக என்ன கொடுக்கலாம்?

  • பிடித்த உணவு

  • நல்ல நூல்

  • வளர்க்கச் செடி

  • கொஞ்ச வளர்ப்புப் பிராணி

  • பயன்படுத்த எண்ணியல் கருவி

  • நண்பரோடு பேச அனுமதி

  • பார்க்கில் போய் விளையாட வாய்ப்பு

  • தொலைக்காட்சி பார்க்க வாய்ப்பு

குழந்தைகளையேக் கேளுங்கள். தரமுடிந்ததை ஓர் ஒப்பந்தமாக செய்து கொள்ளுங்கள். பரிசளிப்பு ஊக்கத்தைத் தரும். இது ஒரு குறுகிய கால உத்தி தான். சிறுபிள்ளைகளிடம் நன்கு எடுபடும். செய்து பாருங்கள்.

2. உங்கள் குழந்தையின் கற்றல் முறையினைத் தெரிந்துக் கொள்ளுங்கள்.

நாம் ஒவ்வொருவரும் வெவ்வேறு முறைகளில் கற்றுக் கொள்கிறோம். எப்படி?

  • சிலர் காட்சிகள் மூலம் கற்கும் முறையில் எளிதாகக் கற்பார்கள்.

  • சிலர் கேட்டல் மூலம் கற்கும் முறையில் எளிதாகக் கற்பார்கள்.

  • சிலர் படித்தல் மற்றும் எழுதுதல் மூலம் கற்கும் முறையில் எளிதாகக் கற்பார்கள்.

  • சிலர் செயல்முறைக் கற்றல் மூலம் எளிதாகக் கற்பார்கள்.

  • சிலர் தனியாக இருந்து கற்றல் மூலம் எளிதாகக் கற்பார்கள்.

  • சிலர் இணைந்து கற்றல் முறை மூலம் எளிதாகக் கற்பார்கள்.

  • சிலர் பல்வழிக் கற்றல் முறை மூலம் எளிதாகக் கற்பார்கள்.

உங்கள் குழந்தையின் கற்றல் முறை எது எனக் கண்டுபிடியுங்கள். அந்த கற்றல் முறை மூலம் கற்கத் தூண்டுங்கள். இது குறித்து தனிக் கட்டுரை எழுதத் தேவையாக இருப்பதால், என் அடுத்தக் கட்டுரையில் விரிவாக எழுதுகிறேன். ஆனால் இப்பொழுது, ஒவ்வொரு குழந்தையும் வித்தியாசமான முறையில் கற்கிறது என்பதை மட்டும் நீங்கள் அறிந்துக் கொண்டால் போதுமானது.

3. கற்றலை கலகலப்பாக மாற்றுங்கள்.

உங்கள் குழந்தைகளுக்குக் கற்பித்துக் கொடுக்கும் போது எரிச்சல் வருகிறதா? அப்படியானால் நீங்கள் சராசரி மனிதர் என உணருங்கள். உங்கள் பிள்ளைகள் நன்கு படிக்க வேண்டும் என்கிற அக்கறையும், அவர்களது எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் என்கிற விருப்பமும் இருப்பதால் தான் அந்த எரிச்சல். அந்த கோபம். இது எல்லோருக்கும் வருகிற ஒன்று தான். அதைக் குறித்து கவலைப்படாதீர்கள்.


ஆனால் இந்த நிலையை மாற்ற முடியும். எப்படி?

நீங்கள் வேலை செய்யும் இடத்தையே, உதாரணமாக எடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் மேலதிகாரி, உங்கள் மேல் எரிந்து எரிந்து விழுந்தால், உங்களுக்கு எப்படி இருக்கும். அவரோடு செலவழிக்கும் நேரத்தை குறைக்கத்தானே விருப்பப் படுவீர்கள். அவரோடு இணைந்து பணி செய்வதை தவிர்ப்பீர்கள். அவரை உங்களுக்குப் பிடிக்காமல் போய்விடும். இல்லையா?

அதனால், திட்டுவதைக் குறையுங்கள். கற்றலை எப்படி கலகலப்பாக்குவது என்று யோசியுங்கள். படிக்கும் திட்டு வாங்கும் நேரம் என்று குழந்தைகள் எண்ணுவதை தவிர்க்க முயலுங்கள். இல்லையென்றால், இதிலிருந்து எப்படிடா தப்பிப்பது எனக் குழந்தைகள் திட்டம் போடுவார்கள். பல நேரங்களில் வெற்றியும் பெற்றுவிடுவார்கள். வயிற்று வலி என்பார்கள். தலை கனமாக இருக்கிறது என்பார்கள். டீச்சர் சொல்லிக்கொடுப்பது புரியவேயில்லை என பழியை டீச்சர் மேல் போடுவார்கள். உங்களை உசுப்பேத்தி, எரிச்சலை ஏற்றி, ‘எக்கேடும் கெட்டுப்போ’ என கோபத்தில் கத்தி உங்கள் இருதய கொதிப்பை அதிகப்படுத்துவார்கள். எல்லா டெக்னிக்கும் அவர்களுக்குத் தெரியும். உங்கள் பிள்ளையாச்சே!


அதனால் கற்றல் நேரத்தை கலகல நேரமாக்குங்கள். எப்படி செய்யலாம்?

  • நீங்கள் ஒரு மாறுவேடம் போட்டுக் கொண்டு பாடம் சொல்லிக்கொடுக்கலாம்.

  • பாடத்திற்கு முன்பு ஒரு கதை சொல்லலாம்.

  • அல்லது ஒரு பாடல் பாடலாம்.

  • இருவரும் சேர்ந்து ஒரு ஓவியம் வரையலாம்.

  • இருவரும் சேர்ந்து ஒரு பாட்டுக்கு நடனம் ஆடலாம்.

  • இருவரும் சேர்ந்து தட்டு டம்ளர்களைத் தட்டி இசை அமைக்கலாம்.

  • விளையாட்டு மூலம் கற்பிக்க முயலலாம். (என் ஜிங்கு மங்கு நூலில் பல விளையாட்டுகள் இருக்கின்றன.)

4. பாராட்டுங்கள்.

ஒவ்வொரு சரியான விடைக்கும், பாராட்டுங்கள். பாராட்டுவது நல்லது என்று உங்களுக்குத் தெரியும். ஆனால் நம்ம பிள்ளை தானே! நம்ம மனைவி தானே! நம்ம கணவர் தானே! நம்ம அம்மா தானே! இவரைப் பாராட்டுவது செயற்கையாக இருக்கும் என நினைத்துக் கொண்டு பாராட்டை நன் எண்ணத்திலேயே பல தடவை வைத்து விடுகிறோம். அது சரியல்ல. சரியான விடைச் சொல்லும் போது பாராட்டு கொடுப்பது போன்று, தவறான விடைச் சொல்லும் போது, முயற்சி செய்ததற்காகப் பாராட்டுங்கள். வாழ்க்கை என்பதே பிரச்னைகளுக்குத் தீர்வு காண முயற்சிப்பதே என அவர்களுக்கு உணர்த்துங்கள்.


உங்களைப் பாராட்டும்போது, முதுகில் தட்டிக் கொடுக்கும் போது உங்கள் மூளையில் என்ன நடக்கிறது தெரியுமா?


உங்கள் மூளை டோபமைன், செரொடோனின் என்கிற இரண்டு நரம்பியல் கடத்திகளை (neurotransmitters) வெளியிடுகிறது. இவைகள் உங்களது மகிழ்ச்சி உணர்வை தூண்டிவிடும். உங்கள் மனநிலையை மேம்படுத்தும். உங்கள் தன்னம்பிக்கையை வளர்க்கும். உங்கள் சுயமரியாதையைப் பெருக்கும்.


இந்த உணர்வை உங்கள் பிள்ளைகளுக்கும் கொடுங்கள்.

சரி, எப்படியெல்லாம் பாராட்டலாம்?

  • ‘அட! புத்திசாலி பொண்ணு நீ!’ என அடிக்கடி சொல்லுங்கள்.

  • ‘ நீ அறிவாளி பையன் மாத்திரம் அல்ல, ஒழுக்கமானப் பையனும் கூட’ என அடிக்கடி சொல்லுங்கள்.

  • ‘ உன்னை என் குழந்தைன்னு சொல்ல எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு’ எனச் சொல்லுங்கள்.

  • சொல்ல கூச்சமாக இருக்கிறதென்றால், வெவ்வேறு வாசகங்களை எழுதி சுவற்றில் அவ்வப்போது ஒட்டுங்கள்.

  • அல்லது பிறருக்கு தொலைபேசியில் அழைத்து, உங்கள் பிள்ளைகளை அருகில் வைத்துக்கொண்டு, உங்கள் பிள்ளைகளின் அருமையை, சாதனையை, முடித்த வேலையைச் சொல்லி பாராட்டுங்கள்.

  • குழந்தைகளின் சிறிய அடைவு நிலைகளையும் கொண்டாடுங்கள்.

5. கேள்விகள் கேட்க அனுமதியுங்கள்.

சரியான பதிலைச் சொல்பவன் அறிவாளி அல்ல. சரியான கேள்வியைக் கேட்பவனே அறிவாளி. அதனால், உங்கள் பிள்ளைகள், சரியானக் கேள்விகளைக் கேட்க அனுமதியுங்கள். சல்லித்தனமான கேள்வி என்று ஒன்று இல்லை. கேள்விகளுக்கு நியாயமான பதிலைச் சொல்ல முற்படுங்கள். பதில் தெரியவில்லையென்றால், சேர்ந்து தேடுங்கள். அல்லது அவர்களைத் தேடி உங்களிடம் சொல்லச் சொல்லுங்கள்.

6. கற்றல் கற்பித்தலில் நீங்கள் ஆர்வமாக இருங்கள்.

நீங்கள் பள்ளியில் படித்த போது, உங்களுக்குப் பிடித்த ஓர் ஆசிரியரின் பெயரைச் சொல்லுங்கள். அவரது பெயர் குமரன் என்று வைத்துக் கொள்வோம். குமரன் சார் எப்படி இருப்பார். தூங்குமூஞ்சியாக இருந்தாரா? பிரம்பை வைத்து பின்னி எடுத்தாரா? வாயில் வந்தபடி திட்டிக்கொண்டிருந்தாரா? பாடம் பற்றிய அறிவு இல்லாமல் இருந்தாரா? இல்லை. குமரன் சார், எப்பொழுதும் உற்சாகமாக இருப்பார். கற்றல் கற்பித்தலில் ஆர்வம் காட்டுவார். அவர் உற்சாகமாகவும், ஆர்வமாகவும் இருப்பதோடு மட்டுமல்ல, உங்களையும் உற்சாகமாகவும் ஆர்வமாகவும் வைத்திருப்பார். அதுமட்டுமா? உங்கள் மேல் அன்போடும் அக்கறையோடும் இருப்பார். ஒருவர் உற்சாகமாக இருந்தால் அது எளிதாக மற்றவரைத் தொற்றிக்கொள்ளும்.

அதனால் உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் கற்றுக் கொடுக்கும் போது நீங்கள் ஆர்வமாக இருங்கள்.


எப்படி செய்யலாம்?

  • ‘அப்போய்! வாங்க படிக்கலாம்’ என வாய் நிறைய பல்லாக அழைக்கலாம். (மூதேவி! மூதேவி!! ஒன்னப் பெத்ததுக்கு ரெண்டு எருமை மாட்டை பெத்திருக்கலாம். இப்ப ஒக்காந்து புத்தகத்தை எடுக்கல… கால ஒடிச்சுடுவேன்…கழுதை எனக் கத்துவதைத் தவிர்க்கலாம்.)

  • நீங்களே புத்தகத்தை எடுத்துக்கொண்டு, ‘வாடா கண்ணா…படிக்கலாம்’ என அழைக்கலாம். (நீங்கள் தொலைக்காட்சி பெட்டியில் தொலைந்து போயோ அல்லது, கைபேசியில் கலந்து போயோ இருந்துக் கொண்டு, ‘சனியனே! போய் படி’ என தொண்டை வறண்டு போக கத்தைவதைத் தவிர்க்கலாம்.)

  • குழந்தைகளின் நூற்களை எடுத்து அவ்வப்போது படியுங்கள். அல்லது உங்களுக்குப் படித்துக் காண்பிக்கச் சொல்லுங்கள்.

  • குழந்தைகளுக்கு கற்பனைச் சக்தி அதிகம். அதனைத் தூண்டிவிட என்னசெய்யலாம் என யோசியுங்கள்.

7. வீட்டை கற்றல் ஆலயமாக மாற்றுங்கள்.

வீடு என்பது சாப்பிட்டு, குளித்து, தூங்கி எழுந்து வெளியே போகும் சத்திரம் அல்ல. அது அறிவையும் அறத்தையும் கற்று ஒழுகும் இடம். ஒருவர் மற்றவருக்கு அறிவையும் அறத்தையும் சொல்லிக்கொடுக்கும் ஆலயம் வீடு.

இருவர் கோபம் குடும்பம் நரகம்

ஒருவர் கோபம் ஓயாத் தொல்லை

ஒருவர் பொறுமை இருவர் நலம்

இருவர் பொறுமை இனியக் கோவில்


எல்லோரும் அறிவையும் அறத்தையும் தேடும் நபர்களாக ஆக வேண்டும். அதற்கு பொறுமை மிகமிக அவசியம். கல்வி கற்கும் பள்ளியாக வீட்டை மாற்ற வேண்டும். பார்ப்பது, கேட்பது, தொடுவது, நுகர்வது, சுவைப்பது என இந்த ஐந்து அறிவுகளாத்தான் ஆறாவது அறிவான பகுத்தறிவைப் பெறுகிறோம். படிப்பதன் மூலமாகத்தான், கருத்துருக்களை புரிந்துக்கொள்கிறொம். நமது மூளையை பழக்கப்படுத்துகிறோம்.


அப்படி நம் வீட்டை கல்விக்களமாக மாற்ற என்ன செய்யலாம்?

  • சின்ன வீட்டு நூலகம் அமைக்கலாம்.

  • பிள்ளைகளே காசு சேமித்து நூற்களை வாங்க உற்சாகப்படுத்தலாம்.

  • ஒரு நூல் படித்து முடித்தால், இன்னொரு நூலும் ஒரு ஐஸ் கச்சானும் என வாங்கிக் கொடுக்கிறேன் என டீல் போடலாம்.

  • ‘குடும்ப வாசிக்கும் நேரம்’ என்கிறத் திட்டத்தை நடைமுறைப்படுத்தலாம். வாரத்திற்கு ஒரு முறையோ, இரு முறைகளோ இதைச் செய்யலாம். ஒருவர் வாசிக்க மற்றவர்கள் கூர்ந்து கவனிக்கலாம். “செவிக் குணவில்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்” என்கிற 412வது திருக்குறளை நினைவிற் கொள்ளுங்கள். படிப்பதைக்கேட்டு அறிவை பெருக்கும் நேரம் இல்லாத போது சிறிது வயிற்றுக்கு சாப்பிடலாம் என்று திருவள்ளுவர் கூறுகிறார். சாப்பிடுவதை சரியாகச் செய்கிறோம். படிப்பதை? இனியாவது தொடங்கலாமே!

  • தொலைக்காட்சி நேரத்தைக் குறைத்து, நாவல், சிறுகதை, நாளிதழ்கள், வார மாத இதழ்கள் என வாங்கிப்படிக்கலாம்.

  • குழந்தைகளின் தன் சுத்தம், இடம் சுத்தம் காக்க உதவுங்கள்.

8. சுதந்திரத்தையும் கட்டுப்பாட்டையும் சரியாகக் கையாளுங்கள்.

எல்லோருக்கும் சுதந்திரமாக இருக்கத்தான் பிடிக்கும். யாருக்கும் கட்டுப்பாடு பிடிக்காது. ஆனால் சுதந்திரமும் கட்டுப்பாடும் இணைந்து, பின்னிப் பிணைந்து உள்ளது தான் வாழ்க்கை. வானில் பறக்கும் பட்டத்தைப் பாருங்கள். கையிலேயே வைத்திருந்தால் பறக்குமா? அதைச் சுதந்திரமாக விட வேண்டும். எதிர் காற்றை கிழித்து பறப்பது பட்டம் தான். பறக்க விடுபவன் அல்ல. அதுபோல, கற்றல் அனுபவத்தில் திளைக்க வேண்டியது குழந்தைகள் தான். அதற்கு அவர்களுக்கு சுதந்திரம் வேண்டும்.

சுதந்திரம் என்றால் என்ன? அவர்கள் இஷ்டத்திற்கு செய்ய விடுவதா? இல்லை. நூலைப்பிடிக்காமல் பட்டத்தை காற்றில் விட்டால் என்ன ஆகும். தட்டுத் தடுமாறி, முள்ளில் விழுந்து கிழிந்து விடும். அதனால் பட்டத்தின் நூல் பெற்றோர்களின் கையில் இருக்க வேண்டும். இது தான் கட்டுப்பாடு. சுதந்திரத்தையும், கட்டுப்பாட்டையும் எந்த அளவு சேர்த்து பிணைத்து ஊட்ட வேண்டும் என்று பெற்றோர்களுக்குத் தெரிய வேண்டும். அது காற்று அடிக்கும் திசை மற்றும் அளவைப் பொறுத்தும் இருக்கிறது. ஆகவே சூழலைப்புரிந்து, சுதந்திரம் கொடுத்து, நூலைக்கட்டுப்படுத்தி, பட்டத்தை பறக்க விடும் நுணுக்கத்தை எல்லா பெற்றோர்களும் கற்றுக் கொள்ள வேண்டும்.


எப்படிச் செய்வது?

  • உங்கள் குழந்தைகள் உங்களுக்கு முக்கியமானவர்கள் என்பதை உணர்த்துங்கள்.

  • எழுதுவதோ, படிப்பதோ, புறப்பாடத்திட்டங்களோ, அவர்களையேத் தேர்ந்தெடுக்க விடுங்கள். ஆனால், முழுமையான பாடத்திட்டத்தின் மேல் உங்கள் கண் இருக்கட்டும்.

  • குழந்தைகள் படிக்க தோதுவான சூழல் இருக்கிறதா, வசதிகள் இருக்கின்றனவா என அக்கறையுடன் பாருங்கள்.

  • நேர அட்டவணைப் போடுவதில் குழந்தைகள் பங்கு இருக்கிறது போலப் பார்த்துக்கொள்ளுங்கள்.

9. குழந்தைகள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த உதவுங்கள்.

நீங்கள் வேலை செய்யும் இடத்தை மறுபடி உதாரணத்திற்கு எடுத்துக் கொள்வோம். உங்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல், மேலதிகாரியே எல்லா முடிவுகளையும் எடுக்கிறார். ஒரு காரியத்தை வெற்றியுடன் செய்தாலோ அல்லது செய்வதில் தொய்வு ஏற்பட்டாலோ, ஏன் அப்படி நடந்தது என்பதை உங்களிடம் கேட்க வாய்ப்பு இல்லையென்று வைத்துக்கொள்வோம். என்ன நடக்கும்? கடமைக்குத் தான் உங்கள் பணியை நீங்கள் செய்வீர்கள். ஆர்வமாக இருப்பது போல் நடிப்பீர்கள். மற்றபடி உங்கள் நூறு சதவீத அர்ப்பணிப்பு தரமாட்டீர்கள். ஏனென்றால் அப்படிப்பட்ட வாய்ப்பு அவர்கள் தரவில்லை.


அதையே உங்கள் குழந்தையின் கற்றல் அனுபவத்தோடு இணைத்துப் பார்ப்போம். குழந்தைகளின் உணர்வுகளை (கோபத்தையோ, கவலையையோ, மகிழ்ச்சியையோ) பகிர்ந்துக் கொள்ள வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுங்கள்.

எப்படிச் செய்வது?

  • குழந்தைகளை பேச விடுங்கள்.

  • கண்டுக்காமல் விடாதீர்கள்.

  • அதைரியப்படுத்தாதீர்கள்.

  • ஒரு சிந்தனைக் குறிப்பேடு (Reflection Diary) போன்று உணர்வுக் குறிப்பேடு (Emotion Diary) வைத்துக் கொள்ளச் சொல்லலாம். அதில் குழந்தைகள் அவ்வப்போது அவர்கள் உணரும் உணர்வுகளை எழுதச் சொல்லலாம். அது தனிப்பட்ட குறிப்பேடாகவும் இருக்கலாம். அல்லது பெற்றோர்களுடன் பகிர்ந்துக் கொள்ளும் குறிப்பேடாகவும் இருக்கலாம்.

  • உங்கள் குழந்தைதான் என்றாலும், ‘take for granted’ மனப்பான்மையில் பழகக் கூடாது. ஒவ்வொரு மணித்துளியும் ஒவ்வொருவரும் மாறிக் கொண்டே இருக்கிறார்கள். வளர்ந்துக் கொண்டே இருக்கிறார்கள். ஒவ்வொரு தடவையும் ஒருவரோடு நாம் பேசும் போது, நாம் முன்பு பேசிய நபர் இல்லை அவர். அவர் இப்பொழுது மாறிய, வளர்ந்த நபர். அதனால் ஒரு முன்பின் தெரியாத நபரோடு (stranger) பேசுவது போல் பேசினால் பிரச்னை வராது. ஒரு நபரைப் பற்றிய முன் கருத்து (இவர் இப்படித்தான்!) என்கிற கருத்தோடு பழகும் போது, பிரச்னைகள் வர நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.

10. யார், எது முக்கியம்?

கற்றலில் யார் யார் ஈடுபட்டிருக்கிறார்? எது எது இருக்கிறது? கற்றலில் ஆசிரியர் இருக்கிறார். பாடத்திட்டம் இருக்கிறது. மாணவர் இருக்கிறார். பெற்றோர் இருக்கிறார்கள். கற்றல் செயல்முறை இருக்கிறது. தேர்வு இருக்கிறது, அடைவுநிலை இருக்கிறது.

சரி. இதில் யார் முக்கியம்? எது முக்கியம்?

அடைவுநிலை முக்கியம் தான். அதைக் கொண்டுதான் உயர் பள்ளியோ, படிக்கும் துறையோ, வேலை கிடைப்பதோ முடிவெடுக்கிறார்கள். அதைக் குறைத்து மதிப்பிட வேண்டாம்.

தைப்பூசத்திற்கு, காவடி எடுத்து மலையேறி சாமி தரிசனம் செய்வது முக்கியம். ஆனால் அதற்கு பல நாட்களுக்கு முன்பு விரதம் எடுத்து, காவடி செய்து, திருநாள் அன்று பக்தி மயத்துடன் அதைத் தூக்கிக்கொண்டு வழி நடந்து, பரவசத்துடன் செய்கிற பயணம்? அந்தப் பயணமும் முக்கியம். உள்ளும் புறமும் தூய்மையுடன் வழி நடக்கும் பக்தர்? பக்தரும் முக்கியம். திருவிழாவை மேலாண்மை செய்து நடத்தித் தரும் மேலாளர்களும் முக்கியம். கோவிலும், மலையும், சாமியும் முக்கியம்.

இதைவிட அது முக்கியம். அதைவிட இது முக்கியம் என்று சொல்வதற்கில்லை. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். பக்தர் இதில் காணாமல் போய்விடக்கூடாது.

ஆகவே, கற்றல் கற்பித்தலில் பலரும், பலதும் இருந்தாலும், குழந்தை முக்கியம்.


*****

220 views0 comments

Recent Posts

See All

உலகமும் மனித இனமும் அழியாமலிருக்க COP என்ன செய்கிறது?

மனிதகுலம் ஒரு குடும்பம். உலகம் நம் வீடு. நமது கூரையை நாமே எரிக்கலாமா? அப்படி செய்தால் நம் நிலைமை விபரீதம் ஆகிவிடுமல்லவா? ஆகவே, என்ன...

Comments


bottom of page