அன்பு நண்பர்களே!
தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டத்தில் நீடாமங்கலத்தில் 'கிரீன் நீடா' என்கிற அமைப்பு உங்களுக்குத் தெரியுமா? அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. மு. ராஜவேலு அவர்களை உங்களுக்குத் தெரியுமா? அவர்கள் தமிழகத்துல ஒரு கோடி பனை விதைகளை நட்டு வருகிறார்கள். அந்தக் கதையை உங்களுக்குச் சொல்லட்டுமா?
திரு. மு. ராஜவேலு மற்றும் கிரீன் நீடா அமைப்பினர் முறையா தமிழ்நாடு அரசிடம் அனுமதியும் ஆதரவும் பெற்று இந்தக் காரியத்தைச் செய்கிறார்கள்.கிரீன் நீடா அமைப்பு தமிழ்நாடு முழுக்க பரந்து வளர்ந்து இருக்கிறது. ஆயிரக்கணக்கான உறுப்பினர்கள் சுற்றுச்சூழல் பணிகளைச் செய்கிறார்கள். ஒரு கோடி பனை விதைகளை நட்டு வருகிறார்கள். கிட்டத்தட்ட 60 லட்சம் விதைகளை இது வரை நட்டிருக்கிறார்கள்.
இவர்கள் ஏன் இப்படி பனை விதைகளை நடுகிறார்கள் தெரியுமா?
பனைமரத்திலிருந்து கிட்டத்தட்ட 800க்கும் மேற்பட்ட பயன்களை வரிசைப்படுத்தியிருக்காங்க.
உணவு:
நுங்கு
பதநீர் - கருப்பட்டி, வெல்லம், பனஞ்சீனி, பனங்கற்கண்டு, பனம் மிட்டாய், பனங்கூழ் என வெவ்வேறு வடிவம் பெறுகிறது.
பனஞ்சாறு - உடலுக்கு நலம் தரும் நீரகம். கொழுப்பு, புரதம், கனிமங்கள், உயிர்சத்துக்கள் இரும்பு, ஏரியம், சுண்ணாம்பு, கரிநீரகி ஆகியன உள்ளன. சத்துள்ளது. எளிதில் சீரணம் ஆகும்.
பனங்கிழங்கு - ஒடியல், ஒடியல் புட்டு, ஒடியல் கூழ்
பனம் பழம் - பனை அட்டு (பனம் பழத்தைப் பிழிந்து எடுத்து உலரவைத்து செய்யப் படும் பொருள்), பனங்காய் பணியாரம்
பொங்கல் பானை துழாவதற்கு பனமட்டை துடுப்பு.
என பலவகையிலும் உணவு கிடைக்கிறது
மருந்து:
வியர்க்கூர் மேல் நுங்கு நீரைத் தடவினால் அது மறைந்து விடும்.
தோலுடன் நுங்கைச் சாப்பிட்டால் வெப்ப நோய்கள் குறையும்.
பதநீர் - உடல் சூட்டைத் தணிக்கவும், குடல் மற்றும் வயிற்றுப் புண்களைக் குணப்படுத்தவும் பயன்படுகிறது.
பனங்கற்கண்டு - தொண்டைப் புண்களை குணப்படுத்தவும், உடல் சூட்டைத் தணிக்கவும் பயன்படுகிறது.
வேலைவாய்ப்பு:
6 லட்சம் பேர் - வெல்லம் காய்ச்சுவோர், தும்புக் கைவினைஞர்கள், வியாபாரிகள். எல்லா மரங்களையும் பயன்படுத்தினால் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு இருக்கும்.
பனைஏறுதல் - மரம் ஏறுதல், பூ பக்குவம் அறிதல், சாறு சேகரித்தல். மரம் ஏற, நெஞ்சப் பட்டை, இடை வார், தளை ஆகியன பயன்படுத்தப் படுகின்றன. தளைநாரைக் காலில் கட்டி மரம் ஏறுவர்.
கட்டுமானம்:
வீடு கட்ட - பனை மரத்தை நீளவாக்கில் அறுத்தால் வருகிற நீளமான பனங்கை அல்லது பனை வரிச்சல் உதவுகிறது. கூரை வேய்தல், கதவு
வேலி கட்ட
தட்டிகள் பின்னல்
கயிறுகள்
அலங்காரப் பொருட்கள் - தொப்பி, பணப்பை,
வீட்டு உபயோகப் பொருட்கள் - பனையோலை, முறம் (சுளவு), கூடை, பெட்டி, கடகம், நீற்றுப் பெட்டி, பனைப்பாய், தடுக்கு, விசிறி, பனைநாரில் பின்னிய கட்டில், பனைஓலை குருத்தில் செய்யப்படும் மட்டையில் கூழ் குடித்தல். கிலுகிலுப்பை
விவசாயம்:
கிணற்றுப் பட்டை,
கள்ளெடுக்கும் போது அந்த மணத்திற்காக வந்து மொய்க்கும் வண்டுகள் மற்றும் பூச்சிகள் மகரந்த சேர்க்கை மூலம் விவசாயத்தை செழிக்கச் செய்யும்.
பனைமட்டைகளை வேலியாக அமைத்து, அந்தி சாயும் நேரம் முதல் மறுநாள் பொழுது விடிவது வரை கால்நடைகளை அடைத்து வைப்பர். அவை கழிக்கும் சிறுநீரும் போடும் புழுக்கையும் உரமாகும். இம்முறைக்குக் கிடை அமர்த்தல் அல்லது பட்டி போடுதல் என்று பெயர்.
வேறு பயன்பாடுகள்:
வீட்டிற்கு விறகு,
செங்கல் சூளைகளில் விறகு,
பனை மரத்தைப் பிளந்து கால்வாய்களை கடக்கும் மரப்பாலங்களாக பயன்படுத்துவர்.
கல்வி, இலக்கியம்:
குருத்தோலை, சுவடி. நாம் பயன்படுத்தும் காகிதத்தின் ஆயுட்காலம் நுாறு ஆண்டுகள். பனை ஓலையின் ஆயுட்காலமோ 400 ஆண்டுகள்.55
கருப்புக்கட்டியை ‘பனாட்டு’ என்று தொல்காப்பியர் குறிப்பிடுகிறார்.
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாகக் கொள்வார் பயன் தெரிவார் - தக்க சமயத்தில் ஒருவர் செய்த உதவி அளவில் தினை போன்று சிறியதாக இருந்தாலும், அந்த உதவியினால் பயன் பெற்றவர் அதனைப் பனை போன்று பெரிதாகக் கருதுவர். - திருவள்ளுவர்
சேர மன்னர்கள் பனம்பூ மாலைய அவர்களது அடையாளமாக அணிந்து மகிழ்ந்தனர். வள்ளல் பாரி பனையைத் தன் சின்னமாக வைத்திருந்தார்.
புற்றாளி, புற்பதி, போந்து, பெண்ணை, தாளி, தருவிராகன், கரும்புறம், காமம், தாலம், ஓடகம் என்று அழைக்கப்பட்டது பனைமரம்.
பனை உண்மையில் மரமல்ல, அது புல்லினத்தைச் சேர்ந்தது. இதைத் தொல்காப்பியமே உறுதிப்படுத்தியுள்ளது. "புறக்காழனவே புல்லெனப்படுமே" என்ற பாடலில் பனையை ஒருவித்திலைத் தாவரம் என்று தொல்காப்பியம் கூறுகிறது.
தமிழர் பண்பாட்டில், சங்க இலக்கியங்களில் ‘மடலேறுதல்’ என பதிவாகியுள்ளது.
‘பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன பவளக் கூர்வாய் செங்கால் நாராய்’ என்பது சத்திமுத்தப் புலவரின் உவமை.
விளையாட்டு:
பனைஓலை காத்தாடி
பனைஓலை மட்டையில் அமர்ந்து இழுத்தல்.
பனங்காய்களில் தள்ளு வண்டி செய்தல்.
கலாச்சாரம், பண்பாடு
சொக்கப்பனை எரிப்பு
கார்த்திகை தீபம் - மாவளி சுற்றுதல் - ஆண் மரத்தில் காய்க்கும் ‘ஆணங்காய்’ களை உலர வைத்து, மூட்டம் போட்டு, கரியாக்கி செய்தல்.
சுற்றுச்சூழல்:
மண் - மண்அரிப்பைத் தடுக்கிறது. கடல் அரிப்பைத் தடுக்கும்.
பறவைகள் கூடுகள் கட்டி வாழ்கின்றன. தூக்கணாங்குருவி
நீர் நிலைகளைக் காக்க அதனைச் சுற்றி பனைகளை வளர்க்க வேண்டும்.
பழமொழி/சொலவடை
பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது.
காவோலையைப் பார்த்து பச்சையோலைச் சிரித்ததாம்.
ஆயிரம் தென்னை சாய்ந்தாலும் ஒரு பனை சாய ஒரு வாரம் புயல் அடிக்க வேண்டும்.
பத்து பனைமரங்கள் இருக்கும் இடத்தில் கிணற்று நீர் வற்றாது.
‘பனைக்குப் பத்தடி’ என்பது மரபு.
உச்சி சலசலக்கும். உடல் நீண்டு இருக்கும். நிறம் கருத்திருக்கும். நிமிர்ந்து பார்த்தால் கழுத்து வலிக்கும். அது என்ன?
தன்மை:
பனைமரங்கள் அடர்காடுகளில் இருப்பதை விட மனிதர்கள் வாழும் பகுதியிலேயே பெரும்பாலும் இருக்கிறது.
சராசரி 36 முதல் 42 மீட்டர் வரை உயரமுடையது.
வெள்ளம், புயல், சுனாமியைத் தாங்கும் சக்தி உள்ளது.
வரட்சியைத் தாங்கி வளரக்கூடியது. வளரும்.
மணல், களிமண், உவர் மண் என எந்த மண்ணிலும்
ஆணி வேர்த்தொகுப்பு இல்லாமல் சல்லி வேர் தொகுப்பு 60 அடியில் இருந்து 100 அடி வரை அகலத்திலும், 20லிருந்து 30 அடி வரை ஆழத்திற்கும் வேர் செல்லும்.
குறைந்த பராமரிப்பு.
குறைந்த நீர்த்தேவை.
தென்னையை ஒத்த பண்புகளைக் கொண்ட ஆரிகேசியே என்னும் குடும்ப இனம்.
பனை வளர்ந்து முதிர்ச்சியடைவதற்கு 15 ஆண்டுகள் ஆகும். 100 ஆண்டுகளைக் கடந்தும் வாழும்.
ஓராண்டுக்கு 12 மட்டைகள் விடும்.
ஆண் பனை (அலவுப்பனை, அழகுப்பனை) பூக்கள் மட்டுமே பூக்கும். பெண் பனை (பனங்காய் பனை, பருவப் பனை) எனப் பெயர்
இது, 800 வகை பயன்களை தரும் என கண்டறிந்துள்ளனர்.
வகைகள்:
ஆண் பனை, 2. பெண் பனை, 3. கூந்தப்பனை, 4. தாளிப்பனை, 5. குமுதிப்பனை, 6.சாற்றுப்பனை, 7. ஈச்சம்பனை, 8. ஈழப்பனை, 9. சீமைப்பனை, 10. ஆதம்பனை, 11. திப்பிலிப்பனை, 12. உடலற்பனை, 13. கிச்சிலிப்பனை, 14. குடைப்பனை, 15. இளம்பனை 16. கூறைப்பனை, 17. இடுக்குப்பனை, 18. தாதம்பனை, 19. காந்தம்பனை, 20. பாக்குப்பனை, 21. ஈரம்பனை, 22. சீனப்பனை, 23. குண்டுப்பனை, 24. அலாம்பனை, 25. கொண்டைப்பனை, 26. ஏரிலைப்பனை, 27. ஏசறுப்பனை, 28. காட்டுப்பனை, 29. கதலிப்பனை, 30. வலியப்பனை, 31. வாதப்பனை, 32. அலகுப்பனை, 33. நிலப்பனை, 34. சனம்பனை
இதற்கு, ஓடகம், தாலம், கரும்புறம், காமம், பெண்ணை, போந்து, புற்பதி, புற்றாளி, தாளி, தருவீராகன் போன்ற பெயர்களும் உண்டு.
இந்தியா, தமிழ்நாடு
இந்தியாவில் உள்ள பத்து கோடி பனைமரங்களில் ஐந்து கோடி பனைமரங்கள் தமிழ்நாட்டில் இருக்கின்றன.
தமிழ்நாட்டின் மரம் பனைமரம்.
தமிழரின் அடையாளம்.
பனையூர், பனைக்குளம், கலந்த பனை, கூட்டப்பனை என்று பனையின் பெயிரில் 100க்கும் மேற்பட்ட ஊர்கள் இருக்கின்றன.
பனை மர விதை நடுவது எப்படி?
விதைத் தேர்வு - அதிக விளைச்சல் தரக்கூடிய, குட்டைத் தன்மை கொண்ட, விரைவில் ஈனக்கூடிய பூச்சி நோய் தாக்குதல் இல்லாத தாய் மரங்களிலிருந்து பனம் பழங்களைச் சேகரிக்க வேண்டும்.
நான்கு வாரங்களுக்கு அவைகளை நிழலில் குவித்து வைத்திருக்க வேண்டும்.
இதில் எடை குறைந்த சுருங்கிய துளைகள் உள்ள பழங்களை நீக்கிவிட வேண்டும்.
தரமான பனங்கொட்டைகளை 3 மணி நேரம் நீரில் ஊற வைத்து விதைக்க வேண்டும்.
மணல், மண், மட்கிய எரு ஆகியவற்றை சரிக்கு சரி கலந்து அதில் பனங்கொட்டைகளை விதைத்தால் விரைவாக முளைக்கும்.
3 முதல் 6 மீட்டர் இடைவெளியில் 1 அடி நீளம் மற்றும் அகலம், 2 அடி ஆழம் உள்ள குழிகளில் நடவேண்டும்.
பனைமரம் நடுவோர்
தமிழ்நாடு பனை மரத் தொழிலாளர் நல வாரியம்.
கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு - தலைமை ஒருங்கிணைப்பாளர் ராஜவேலு.
நாட்டு நலப்பணித் திட்டம்
தமிழ்நாடு பசுமை இயக்கம்
சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என்ன சொல்கிறார்கள்?
ராஜவேலு: முன்னாள் முதல்வர் காமராஜர் கடல் அரிப்பை தடுப்பதற்கு பல இடங்களில் பனை மரங்களை நட்டு கடலரிப்பை தடுத்துள்ளார் என்ற அடிப்படையில் கடற்கரை ஓரங்களில் பனை விதைகளை நடவு செய்து வருகிறோம்.நாகை மாவட்டம் தெற்கு பொய்கை நல்லூர் கிராமத்தில் பனை மரங்கள் கடற்கரை ஓரத்தில் வேலி போல் வளர்ந்துள்ளதால் கஜா புயல், சுனாமி போன்ற பேரிடர் காலங்களில் அந்த கிராமத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.இவ்வாறான தகவல்களை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று அதன் பயனாக அரசு தற்போது பனை விதைகளை நடவு செய்வதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.டெல்டா மாவட்டங்களில் உள்ள வயல் வெளிகளில் பனை மரங்கள் இருப்பதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாயம் பாதிக்கப்படுவதாக பனை மரங்களை ஆசிட் ஊற்றி அழித்து வருகின்றனர்.எனவே டெல்டா மாவட்டங்களில் சமூக வலைதளங்கள் ஊடாகவும், இளைஞர்கள் மூலமாகவும் பனை மரம் மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. எனவே டெல்டா மாவட்டங்கள் விரைவில் பனை மரங்களால் பலன் பெறும்" என்று நம்புவதாக தெரிவித்தார்.
தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர் நல வாரியத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் பிபிசி தமிழிடம் பேசுகையில், "தமிழகத்தில் 15 கோடி பனை மரங்கள் இருந்த நிலையில் தற்போது 4 கோடி பனை மரம் மட்டுமே உள்ளது. கள் இறக்குவதற்கு அனுமதி அளிக்காததால் பெரும்பாலான பனை மரங்கள் பராமரிக்கப்படாமல் அழிந்து போய்விட்டன. கடல் அரிப்பு ஏற்படாமல் இருக்கவும் பனைத் தொழிலாளர்களை ஊக்கப்படுத்தவும் தமிழகம் முழுவதும் 14 கடலோர மாவட்டங்களில் 430 இடங்களில் பனை விதைகள் நடுவதற்கு திட்டமிடப்பட்டு தொடர்ந்து பனை விதைகள் நடவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. பனை விதைகள் நடவு செய்வதால் இயற்கை பேரிடர் மற்றும் கடல் அரிப்பை தடுக்க முடியும் என்ற நம்பிக்கையில் இந்த பணி நடைபெற்று வருகிறது. கடும் சிரமத்திற்கு மத்தியில் பனை விதைகளை சேகரித்து விதைத்து வருகிறோம். ஈரோடு, சேலம், கரூர், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பனை விதைகள் சேகரிக்கப்படுகிறது. பனை மரங்களை வெட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கடந்த அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டது ஆனால் சட்டம் இயற்றப்படவில்லை. எனவே வரும் சட்டமன்ற கூட்டத்தில் சட்டம் இயற்றப்பட வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். அதன் அடிப்படையில் விரைவில் சட்டம் இயற்றப்படும் என்ற நம்பிக்கை உள்ளது" என்கிறார் எர்ணாவூர் நாராயணன்.
மதுரை அமெரிக்கன் கல்லூரி தாவரவியல் துறை உதவி பேராசிரியர் டாக்டர் டி ஸ்டீபன். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "பனைமரத்தை பலரும் தமிழகத்தின் பூர்வீக மரம் என நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் பனை மரம் கிழக்கு ஆப்பிரிக்காவை பூர்வீகமாக கொண்டது. இலங்கையில் பனை விதைகள் அதிக அளவு விதைக்கப்பட்டு பனை மரங்கள் வளர்க்க பட்டது. நாளடைவில் இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு இடம்பெயர்ந்த மக்கள் தமிழக கடற்கரை பகுதிகளில் பனை விதைகளை நட்டு பனை மரத்தை வளர்த்தனர். பனைமரத்தின் வேர்கள் மிகவும் ஆழமாக போகாது. அதே போல் வேர்கள் அகலமாகவும் படராது என்பதால் மரத்தின் வேர்கள் மரத்தைச் சுற்றி சுமார் 2 அடி அளவுக்கு மட்டுமே இருக்கும். இதனால், குறிப்பிட்ட இடைவெளியில் தொடர்ந்து பனை மரங்களை நட்டு பனை வேலி போல் இருந்தால் ஒரு அளவுக்கு கடல் அரிப்பை தடுக்குமே தவிர அதுவும் பெரிய அளவு பலன் அளிக்காது. பனை மரங்களின் இலை விசிறி போல் இருப்பதால் மழை நீர் மரத்தின் மீது பட்டு வெளியே சிதறாமல் மரத்தின் தண்டு வழியாக வேர் பகுதிக்கு சென்று நீர் சேமிக்கப்படுவதால் பனை மரங்கள் வறட்சி தாங்கி வளர்கின்றதே தவிர நிலத்தடி நீரை சேமிக்க பனை மரம் உதவுவதாக கூறுவதில் உண்மை இல்லை. அது அறிவியல் ரீதியாக நிருபிக்கப்படவில்லை. பனை மரங்களால் காற்றின் வேகம் குறைந்து கடற்கரையில் மணல் திட்டுகள் உருவாகும். அதனால் சுனாமி போன்ற பேரிடர்களில் இருந்து கடற்கரை கிராமங்கள் பாதுகாக்கப்படும். கடல் அரிப்பை தடுப்பதற்கு பனை மரத்தை நடவு செய்வதற்கு பதிலாக இராவணன் மீசை புல், தாழம்பூ, பூவரச மரம் உள்ளிட்டவைகளை நட்டு வளர்த்தால் உடனடியாக கடல் அரிப்பை தடுக்கலாம். பனை மரம் கற்பக விருட்சம் என அழைக்கப்படுவதால் பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பொருட்கள் மக்களுக்கு பயன் அளிக்குமே தவிர சுற்றுச்சூழலுக்கு பலன் அளிக்காது என்பது தான் அறிவியல் உண்மை" என்றார்.
*************
Comments