Paulo Coelho எழுதிய Like the Flowing River - Thoughts and Reflections நூலைப் படித்துக்கொண்டிருந்தேன். ஒரு நிகழ்ச்சியைப் படித்ததும், 'அட! இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பே இந்த உவமையை ஒரு பயிற்சியில் என் நண்பர் சொன்னாரே! அதை நானும் ஒரு சில பயிற்சிகளில் பயன்படுத்தியிருக்கிறேனே! இவர் சொன்னது தானா?" என ஆச்சரியப்பட்டேன். நீங்கள் கூட இதைக் கேள்விப்பட்டிருக்கலாம். முதலில் என்ன படித்தேன் எனச் சுருக்கமாக எழுதி விடுகிறேன். பிறகு என் எண்ண ஓட்டத்தை எழுதுகிறேன். உவமை பழசாக இருந்தாலும் எண்ணம் புதிது. தொடர்ந்து படியுங்கள்.
Paulo Coelho எழுதுவதையும் என் எண்ணத்தையும் சேர்த்து சேர்த்து எழுதுகிறேன்.
ஒரு பாட்டி தன் பேரனோடு பேசுகிறார்.
"நீ ஒரு பென்சிலிருந்து கற்றுக்கொள்.
முதலாவதாக, இதைத்தெரிந்துக்கொள். பென்சில் தானாக எழுதுவதில்லை. யாரோ அதைப்பிடித்து எழுதுகிறார்கள். அதைப்போல் கடவுளிடம் உன்னை அர்ப்பணித்து விடு.
ஆம்!என் கதையை என் கூட இருப்பவர்களும் சேர்ந்து தான் எழுதுகிறார்கள். என் பெற்றோர், என் குடும்பம் எவ்வளவு பெரிய பங்கு வகிக்கிறது! என் ஆசிரியர்கள், நண்பர்கள், உறவினர்கள், மேலாளர்கள், நூலாசிரியர்கள், ஊடகத்தில் வருபவர்கள் என என்னை கையிலெடுத்து என் கதையை எழுதுகிறார்கள். இந்த இயற்கை என்னைக்கொண்டு தன் கதையை எழுதிக்கொள்கிறது.
நான் தான் என் கதைக்கு ராஜா என நினைக்கக் கூடாது. என் வாழும் காலமும், வசிக்கும் இடமும் என் கதையை எழுதுகிறது. என் கர்வத்தை விட்டு, அவர்கள் கையில் என்னை ஒப்படைக்க வேண்டும். அதே நேரம் என் சுயத்தை நான் இழந்து விட முடியாது. தோட்டக்காரனின் கையில் தன் குடுமியை எல்லா மரமும் அவ்வளவு எளிதாக கொடுப்பதில்லை. தன் கதையை தானே எழுத முயற்சித்துக்கொண்டே இருக்கிறது மரம்.
ஒன்று புரிகிறது. என் கதையை நான் எழுதும் வேளையில், பிறருக்கும் அதில் பங்கு இருக்கிறது என்பதை உணர்ந்துக் கொள்கிறேன்.
பாட்டி தொடர்கிறார்: பேரனே! இரண்டாவதாக, குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை பென்சிலை சீவி விடவேண்டும். அதற்கு வலித்தாலும், கூர்மையாகிக்கொள்வதற்கு அது தேவைப்படுகிறது. அதைப்போல சில வலிகளை பொறுத்துக்கொண்டு, உன்னையே நீ புதுப்பித்துக்கொள்.
எவ்வளவு உண்மை! நான் துவக்கப்பள்ளியில் படிக்கும் போது, அடிக்கடி புது பென்சிலை வாங்க காசு இருக்காது. என் அக்காக்கள் பயன்படுத்திய பென்சில் கரைந்து சுண்டு விரல் அளவில் இருக்கும் போது என் பயன்பாட்டிற்கு வரும். முனை மங்கிப் போகும்போது, அதை பிளேடு வைத்து சீவுவேன். பென்சிலுக்கு வலிக்குதோ இல்லையோ, எனக்கு வலிக்கும்.
உளிக்கு அஞ்சிய கல், கோயிலில் படிக்கட்டானது. உளிக்கு அஞ்சாமல் வலியைத் தாங்கிக்கொண்ட கல் சாமியானது. படிக்கட்டை எல்லோரும் மிதித்துச் சென்றார்கள். சாமியான கல்லை எல்லோரும் வணங்கிச் சென்றார்கள். ஆகவே, கஷ்டங்களையும் அவமானங்களையும் தாங்கிக்கொள்ள வேண்டும். என்னையே கூர்மையாக்கிக்கொள்ள எந்தக் காலத்திலும் தயங்கக்கூடாது. தொடர்ந்து படிக்க வேண்டும். நல்லவர்கள் பேசுவதைக் கேட்க வேண்டும். பயிற்சிகளில் பங்கெடுக்க வேண்டும்.
தினமும் சர்ச்சுக்கு ஜார்ஜ் சென்றுகொண்டிருந்தார். அதே கோயில். அதே பாதிரியார். அதே பிரசங்கம். ஜார்ஜ்க்கு போர் அடித்துவிட்டது. சர்ச்சுக்குப்போவதை நிறுத்திக்கொண்டார். இரண்டு வாரங்கள் கவனித்த பாதிரியார் ஜார்ஜ் வீட்டிற்குச் சென்றார். ஜார்ஜ் அவரை வரவேற்று, வீட்டின் வரவேற்பறையில் சூடு கொடுத்துக்கொண்டிருந்த எரியும் நெருப்பு அருகே அமர வைத்தார். வந்த பாதிரியார் எரியும் நெருப்பிலிருந்து விறகுகளை விலக்கி வைத்தார். நெருப்பு அணைந்தது. அறையே குளிர ஆரம்பித்துவிட்டது. ஜார்ஜ் புரிந்துக்கொண்டு, அடுத்த வாரம் சர்ச்சுக்கு கிளம்பினார். எரியும்
நெருப்பிலிருந்து விறகை விலக்கி வைப்பது போல, நமக்கு எங்கு சக்தியும் உற்சாகமும் கிடைக்கிறதோ அங்கிருந்து விலகும் போது, நம்முள்ளே எரியும் நெருப்பும் அணைந்து விடும்.
அதனால் பென்சிலை அவ்வப்போது சீவி கூராக்குவது போல, என்னையும் கூராக்கிக்கொள்ளவேண்டும்.
பாட்டி தொடர்கிறார்: பேரனே! மூன்றாவதாக, ஒரு அழி ரப்பரை வைத்து அழித்துக்கொள்ள பென்சில் வழிவகுக்கிறது. தவறு செய்வதில் தவறில்லை. ஆனால் அத்தவறை திருத்திக்கொள்ள வேண்டும்.
தவறுகளை தவறுகள் என புரிந்துகொள்வதற்கு முன்பு வாழ்க்கை முடிந்து போய்விடுகிறது. நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண் மேற்சென்று இடித்தற் பொருட்டு என்று வள்ளுவர் சொல்லுகிறார். நட்பு என்பது வெறும் நகைப்பதற்கு மட்டுமல்ல. நண்பர் தவறு செய்யும் போது அதைச் சுட்டிக்காட்டுவதும் நட்பே என்கிறார். தவறுகளை யார் சுட்டிக் காட்டினாலும், உடனே திருத்திக்கொள்ள வேண்டும். எது இடையூறாக இருக்கிறது? பெரும்பாலும் என் தான் என்கிற அகங்காரம் தான்.
ஒரு நாட்டில் ஓர் அரசர் இருந்தார். தான் ஒரு பெரிய ஆள் என்கிற நினைப்பு அவருக்கு. பக்கத்தில் ஒரு காட்டில் ஞானி ஒருவர் ஆசிரமத்தில் இருந்தார். தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் அந்த ஞானியைப் போய் பார்க்கிறார்கள் என அரசர் கேள்விப்பட்டார். பொறாமைப்பட்டார். தன் சிறு படையுடன் ஞானியின் ஆசிரமத்திற்கு அரசர் சென்றார். அசிரமத்தின் காவலாளிகளிடம், "நான் வந்திருக்கிறேன் என உங்கள் சாமியிடம் போய்ச் சொல்லுங்கள்" எனக் கட்டளையிட்டார். அதற்கு ஞானியோ,"நான் இறந்ததும் வந்து என்னை பார்க்கச் சொல்லுங்கள்" என பதில் கொடுத்தார். அரசருக்கு கோபம் வந்தது. ஞானி சொன்னது என்னவென்றால், "நான்" என்கிற அகந்தை இறந்ததும் வந்து பார்க்கச் சொல்லுங்கள் என்பது தான். மந்திரி எடுத்துச் சொன்னதும் புரிந்துக் கொண்ட அரசர் தன் தவறை திருத்திக்கொண்டார். அகந்தைக்கும் தன்னம்பிக்கைக்கும் நூலளவு வித்தியாசம் தான் இருக்கிறது.
பாட்டி தொடர்கிறார்: பேரனே! நான்காவதாக, பென்சிலின் வெளிப்பகுதியான மரம் முக்கியமில்லை. உள்ளே உள்ள எழுது பொருளான கரிதான் முக்கியம். ஆகவே உன் உள்ளே என்ன நடக்கிறது என்பதில் கவனமாக இரு.
என் தந்தையார் சொல்வார். "வாயிக்குள் போவதிலும் வாயிலிருந்து வெளிவருவதிலும் கவனமாக இரு" என்பார். அது என் உணவு முறையையும், பேசுகின்ற முறையையும் வெகுவாக மாற்றியது. உடம்பார் அழியில் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார் உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே." என்ற திருமந்திரத்தை திருமூலர் அளித்தார்.
உடலைப் பேணுவது மிகமிக முக்கியம். அப்பொழுது தான் அதில் உள்ள உயிரை வளர்க்கவேண்டும். பல நேரம் வெளிப்பூச்சுக்கு கொடுக்கக்கூடிய முக்கியத்துவத்தை, உடல் ஆரோக்கியத்திற்கு கொடுப்பதில்லை. அதைப்போல, உடலுக்கு கொடுக்கும் கவனத்தைப்போல, உயிருக்கும் கொடுக்கவேண்டும்.
ஒரு திருவிழாவில் பலூன் விற்பவர் பலூன்களை விற்றுக்கொண்டிருந்தார். குமரன் கேட்டான்" ஐயா! அதோ பறக்கிறதே சிவப்பு, பச்சை, மஞ்சள் நிற பலூன்கள் அதைப்போல இந்த கருப்பு பலூனும் பறக்குமா?" என்று கேட்டான். அதற்கு அந்த பலூன் விற்பவர் சொன்னார் " தம்பி! பலூன் பறப்பது அதன் நிறத்தால் அல்ல. பலூனுக்குள் இருக்கும் காற்றால் தான்."
இந்தக் கதை என் வாழ்வில் பல அதிசயங்களைச் செய்தது. நான் கறுப்பாக இருக்கிறேன். குட்டையாக இருக்கிறேன். மூக்கு கூராக இல்லை. முகம் அழகாக இல்லை. என்றெல்லாம் நான் கவலைப்படுவதை நிறுத்தினேன். என்னை சுயமாக சிந்திக்கும் ஆளாக, பிறரது நலனுக்காக பாடுபடும் நபராக என்னை பக்குவப்படுத்துவதில் கவனம் செலுத்தத் துவங்கினேன்.
பாட்டி கடைசியாகச் சொன்னார்: பேரனே! ஐந்தாவதாக, பென்சில் தான் கடந்து வந்த பாதையில் குறிப்புகளை விட்டுச் செல்கிறது. ஆகவே, ஒவ்வொரு நிகழ்விலும் நல்ல அனுபவத்தை விட்டுச் செல்வதில் கவனமாக இரு.
ஒரு புதுக்கவிஞன் சொன்னான். வண்டி மாடு கூட தன் காலடிச்சுவடுகளை விட்டு விட்டுச் செல்கிறது. ஆகவே, வெந்ததை தின்று விதி வந்தால் சாவோம் என்கிற மேம்போக்கான மனப்பான்மையை உதறிவிட்டு, என் வாழ்க்கையிலிருந்து மற்றவர்களும் சில பாடம் படிக்கும் அளவுக்கு, ஒரு வரலாறை விட்டுச் செல்ல வேண்டும்.
இந்த நினைப்பு எனக்கு வந்ததும், என் எண்ணங்களையும் உணர்வுகளையும் அனுபவங்களையும் ஆவணப்படுத்த வேண்டும் என்கிற உத்வேகம் எனக்கு வந்தது. என் வாழ்க்கை கதையை என் 60 வது வயதில் எழுதத் துவங்கிவிட்டேன். வரலாறைப் படிப்பது மட்டுமல்ல, வரலாறை படைப்பதிலும் என் பங்கு இருக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன்.
Paulo Coelho! நன்றி. என் எண்ணக்குதிரையைத் தட்டி எழுப்பியதற்கு நன்றி.
*****
Comments