top of page

கதை 3 - மூங்கில் கூடும் மேலோகமும்

ஓர் ஊர்ல ஒரு ஞானி இருந்தாரு. அவர்ட்ட பல சீடர்கள் இருந்தாங்க. ஞானி சொல்றது வேதவாக்கு’ன்னு நம்புனாங்க. அதில் ஒரு சீடருக்கு மிருகங்களை வளர்க்கப் பிடிக்கும். அவர் பெயர் அன்பழகர்.

அன்பழகர் ஞானியின் பிரசங்கத்தைக் கேட்பார். பிறகு தான் வளர்க்கும் மிருகங்களுடன் பேசி அக மகிழ்வார்.

ஒரு நாள், அன்பழகர் ஒரு பாம்புக்குட்டியைப் பார்த்தார். அது கொடுமையான விஷமுள்ள பாம்புக்குட்டி. அதைப் பிடித்து மூங்கில் கூடு ஒன்று செய்து அதில் வளர்த்து வந்தார். பால் முதலிய உணவுப் பண்டங்களைக் கொடுத்து மகிழ்வார். அந்த பாம்புக்குட்டிக்கு அன்பழகர் ‘மேலோகம்’ எனப் பெயரிட்டு அழைத்தார்.

மற்ற சீடர்கள் அன்பழகரின் அறைக்கு வருவார்கள். ‘மேலோகத்தை’ப் பார்ப்பார்கள். அது விஷப் பாம்புக்குட்டி எனத் தெரிந்ததும்,

‘அன்பழகா! மேலோகத்தை காட்டில் போய் விட்டுடு! இது உனக்கு மட்டுமல்ல, மற்றவர்களுக்கும் நல்லதல்ல’ என்றார்கள்.

‘ம்ஹும்! முடியாது. மேலோகம் என் மகன் போல’ எனச் சொல்லிவிட்டார் அன்பழகர்.

இந்தச் செய்தி ஞானியின் காதுக்கு எட்டியது. ஞானி அன்பழகரை அழைத்தார்.

‘ குருவே! கூப்பிட்டீர்களா?’

‘ ஆமாம்!… நீர் ஒரு விஷப் பாம்புக்குட்டியை வளர்க்கிறீரா?’

‘ ஆமாம் குருவே!’

‘ அது ஒரு விஷப்பாம்பு எனத் தெரிந்தும் வளர்க்கிறாயா?’

‘ குருவே! அதன் பெயர் மேலோகம். என் பிள்ளை போல ஆசையாக வளர்க்கிறேன். அதை விட்டுப் பிரிய முடியாது குருவே!’

‘ அன்பழகரே! விஷப்பாம்பை வைத்துக் கொள்வது நல்லதல்ல. நீ மேலோகம் போவதற்கும் அது வழி வகுத்துவிடும். இப்பொழுதே அதைக் கொண்டு போய் காட்டில் விட்டு விடு. அது தான் உனக்கும் நல்லது. மற்றவர்களுக்கும் நல்லது.’

அன்பழகருக்கு ஞானி சொன்னது சரியாகப் படவில்லை. மேலோகத்தை விடுவதாக இல்லை.

சில நாட்கள் கழிந்தன.

ஞானியும் மற்ற சீடர்களும் வெளியூர் பயணம் செல்ல வேண்டி இருந்தது. பத்து நாட்கள் கழித்துத் தான் திரும்பினர்.

அன்பழகர் வேகமாகத் தன் அறைக்குத் திரும்பினார். ‘மேலோகத்திற்கு’ பழங்கள் வாங்கி வந்திருந்தார். அதை கொடுக்க மூங்கில் கூட்டிற்குள் கையை விட்டார்.

பத்து நாட்களாக பசியாக இருந்த ‘மேலோகம்’, அன்பழகரை கோபத்துடன் கடித்து விட்டது. அங்கேயே நுரைத் தள்ளி அன்பழகர் இறந்து போனார்.

********

படிப்பினை: பெரியோர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் சொல்லுகின்ற அறிவுரைகளை ஆழ்ந்து யோசித்து கடைப்பிடித்தல் நலம். எழுதியவர்: ஜான் பிரிட்டோ பரிசுத்தம்

Recent Posts

See All
கதை 6 - காசும் மரியாதையும்

‘தம்பி கூத்தபிரான், அம்மாவுக்கு மருந்து குடுத்திட்டியா?’ அண்ணன் இரும்பொறை தென்னை மரத்திலிருந்து இறங்கியபடியே கேட்டான். ‘அண்ணா!...

 
 
 
கதை 4 - அரசர் ஓவியம்

ஓர் ஊர்ல ஒரு ராஜா இருந்தார். அவருக்குத் தன்னை ஓர் ஓவியமாக வரைந்து வைத்துக் கொள்ள ஆசைப்பட்டார். அந்த ஊரில் குமரேசன் என்ற ஓவியன் இருந்தான்....

 
 
 

1 Comment


Unknown member
Aug 13, 2021

Saya sangat

Like
JOBA Logo transperent_edited.png

Inspiring Natural Living

John Britto Academy

JOBA

Registered in Australia: ASIC under section 33(8) of BNR Act 2011
 

bottom of page