top of page

தென்னங்குரும்பையில் தேர் - பாரம்பரிய விளையாட்டு - Traditional Game 1

Writer's picture: John Britto ParisuthamJohn Britto Parisutham

Updated: Oct 22, 2024




தேவைப்பொடும் பொருட்கள்: தென்னங்குரும்பை, விளக்கமாத்துக் குச்சி

 

செய்முறை: நான்கு சம அளவான தென்னங்குச்சி (விளக்கமாத்து குச்சி) எடுத்துக்கொள்ளுங்கள். நான்கு குரும்பைகளை எடுத்துக்கொள்ளுங்கள். இப்பொழுது நான்கு குரும்பைகளையும் நான்கு மூலையில் வைத்து விளக்கமாத்து குச்சியால் இணையுங்கள். அப்படி இணைத்தால் இப்படி வரும். (படம்) அதுவே அடித்தளம். அதைப்போலவே இன்னொரு அமைப்பைச் செய்யுங்கள். இது மேல்தளத்திற்கு.

 

இப்பொழுது அடித்தளத்தையும் மேல்தளத்தையும் நான்கு குச்சிகளால் இணையுங்கள். ஒரு பெட்டி போல வரும். (படம்)

 

அடுத்து, மேல்தளத்தில் நான்கு குரும்பையிலும் சாய்வாக (உட்புறம்) நான்கு குச்சிகளை செருகி, நான்கு குச்சிகளின் முனைகளை ஒரே குரும்பையில் செருகிவிடுங்கள். இப்பொழுது தேர் வடிவில் வரும். (படம்)

 

தேரை கூடுதலாக அழகு படுத்துவது உங்கள் விருப்பம். தேர் என்று தான் இல்லை. வீடு போல செய்யலாம். வட்டமாகச் செய்யலாம். (வட்டமாகச் செய்தால் கையில் வைத்து சுற்றலாம்.). தென்னங்குரும்பை இல்லையென்றால், வீட்டில் இருக்கும் வெங்காயத்தை பயன்படுத்தலாம். உருளைக்கிழங்கைப் பயன்படுத்தலாம். கத்திரிக்காய் அல்லது வேறு சில கிழங்குகளைக் கூட பயன்படுத்தலாம். எதுவும் இல்லையா? களிமண்ணை உருட்டியும் செய்யலாம். மஞ்சனத்தி காய் போன்ற காய்களையும் பயன்படுத்தலாம். வேப்பங்கொட்டைகளைக் கொண்டு சிறிய தேர் கூட செய்யலாம். செய்துவிட்டீர்களா? இப்பொழுது விளையாட வேண்டியது தான்.

 

விளையாட்டு: தேரின் ஒரு பக்கத்தில் ஒரு கயிறு கட்டி இழுத்துச் செல்லுங்கள். ஆட்டம் பாட்டம் சேர்ப்பது உங்களின் படைப்புத்திறன்.

 

கூடுதல் விளக்கம்:

குரும்பை

குரும்பை என்றால் என்ன என்பது உங்களுக்குத் தெரியுமா? குரும்பை என்பது தேங்காய் குட்டியாக இருக்கும் போது அதன் பெயர் ஆகும். (குறு என்றால் சிறியது, குட்டி என்று பொருள். குட்டி என்பதை ராமநாதபுரம் மாவட்டத்தில் கிட்டி என்பார்கள். அதனால் தென்னங்கிட்டியில் தேர் செய்வது என்று அந்தப் பகுதியில் சொல்வார்கள்). தென்னைமரத்தில் தென்னம்பாளையில் உள்ளதெல்லாம் தேங்காய் ஆகாது. சில அணில் ஏறும்பொழுதோ அல்லது அது போன்ற வேறு சில மிருகங்கள் ஏறும் பொழுதோ, அல்லது சில பறவைகள் பறக்கும் போதோ, தென்னைமரத்திலிருந்து தானாக கீழே விழுந்து தென்னைமரத்து தூறில் கிடக்கும்.

 

தென்னங்குரும்பை – உணவு மற்றும் மருந்து

இரண்டு மூன்று நாட்கள் ஆகிவிட்டால் தென்னங்குரும்பை லேசாக பழுத்துவிடும். அதை எடுக்காமல் பச்சையாக இருக்கும் தென்னங்குரும்பைகளை சிறுவர்கள் எடுப்பார்கள். அதன் குமிழைப் பிய்ப்பார்கள். அதில் உள்ள குருத்து நன்றாக இருக்கும். சுவையாக இருக்கும். அதை எடுத்து உண்ணலாம். தினம் இரண்டு கிட்டி சாப்பிட்டால் உடலில் சர்க்கரை அளவு குறையும் என்று பெரியவர்கள் கூறுவார்கள். கிராமத்தில் சில பெரியவர்கள் அந்த கிட்டியை மென்று குதப்பி பல் விளக்கச் செய்வார்கள். பல் ஈறுகளை வலுவாக்கும்.

 

நிறைய பாலர் பள்ளிகளில் நெகிழியில் செய்யப்பட்ட கத்திரிக்காய், தக்காளி, ஆப்பிள், என்று காய்கறிகளும் பழங்களும், பெரும் பணம் செலவழித்து வைத்திருப்பார்கள். அதைச் சிறு பள்ளிகள் வாயில் வைத்து கடித்துக் கொண்டிருப்பார்கள். சிலர் வீட்டில் கூட அப்படி வைத்திருப்பார்கள். பிள்ளைகளின் பற்கள் வீணாகும். அது உடலுக்கு பெருந்தீங்கு விளைவிக்கும் என்று தெரிந்தும் நெகிழி பயன்பாடே நமது வாழ்வியலாகிவிட்டது. அதற்கு நேர்மாறாக உயிரான தென்னங்குரும்பை வைத்து விளையாடுவது நல்லது. மறுசுழற்சியை மையப்படுத்திய விளையாட்டு இது. உணவாக ஆகிறது. மருந்தாக ஆகிறது.

 

உறவுகளை வளர்க்கும் தென்னங்குரும்பை விளையாட்டு

ஆண் பிள்ளைகள் பெண் பிள்ளைகள் பேதம் பாராமல் விளையாடும் விளையாட்டு. நண்பர்களோடு சேர்ந்து விளையாடும் விளையாட்டு. நான் விளக்கமாத்து குச்சியை எடுத்து வருகிறேன். நான் தென்னங்குரும்பைகளைச் சேகரித்து வருகிறேன். நான் அலங்காரம் பண்ணுகிறேன் என்று ஒவ்வொருவரும் ஆர்வத்தோடு செய்யும் போது உறவுகள் மேம்படுகிறது. இது ஒரு குழு விளையாட்டு. (A game for collaboration.)

 

இயற்கைவழிக் கற்றல்

கற்றலில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், இந்த விளையாட்டு முழுக்க முழுக்க உடலால் கற்பது. மனதால் மட்டும் கற்பது அல்ல. ஐம்புலன்களையும் பயன்படுத்தி கற்றல் அனுபவம் பெறுவது என்பது தான் இந்த விளையாட்டின் உச்சகட்ட அற்புதம். மனத்தால் கற்பது என்கிற இன்றைய நிலைக்கு நேர் எதிரான உடலால் கற்பது என்கிற இயற்கை கற்றல் முறை தான் எல்லா நாட்டுப்புற பாரம்பரிய, மரபுசார்ந்த விளையாட்டுகளும் செய்வது. அதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு இந்த விளையாட்டு. பஞ்ச பூதங்களான நீர், நிலம் காற்று, வான், தீ போன்றவைகளை பயன்படுத்தி, ஐம்புலன்களான மெய், வாய், கண், மூக்கு, செவி மூலம் கற்கும் முறை இந்த இயற்கை கற்றல் முறை. இதன் மகத்துவத்தைப் புரிந்துக் கொண்டால் இதன் மேன்மை புரியும்.

 

கவிஞர் பட்டுக்கோட்டை கலியணாசுந்தரம் அவர்கள் தன் பாட்டில் கீழ்க்கண்டவாறு எழுதுகிறார்: “ஆளும் வளரனும், அறிவும் வளரனும், அதுதாண்டா வளர்ச்சி”. அதாவது ஆள் வளர்வது தான் முதல். பிறகு தான் அறிவு. உடல் முதல். மனம் இரண்டாவது. இன்னொன்றையும் கவனிக்கவேண்டும். உடல் மூலமாக கற்பது தான் இந்த விளையாட்டுகள். அது போல உடல் மூலமாக கற்பது தான் நாட்டுப்புறக் கலைகள். செய்வது மூலம் கற்றல். (Learning by doing or Learning by experience)

 

இயற்கை பற்றிய கற்றல்

இதில் கவனிக்கவேண்டியது என்னவென்றால், இயற்கையில் கிடைக்கும் பொருட்களை வைத்து விளையாடி விட்டு, தூர எறிந்தால் கூட அது உரமாகி விடும். நமது உடம்புக்கோ, சுற்றுச் சூழலுக்கோ பாதிப்பு வராது. விளையாடும் சிறுவர்களுக்கு தென்னை மரம் பற்றிய அறிவு, தென்னை மர வளர்ப்பு, அதனால் வரும் பயன்கள் எல்லாம் தெரிய வரும்.

 

படைப்புத்திறனை வளர்க்கும் விளையாட்டு

அது மட்டுமல்ல, தென்னை மரத்தை வைத்து ஒரு பழமொழி உருவாக்க முடியும். அல்லது ஒரு விடுகதை உருவாக்க முடியும். இதை உற்று நோக்குங்கள். “ஆழக் குழி வெட்டி, அதிலே ஒரு முட்டையிட்டு, அண்ணாந்து பார்த்தால் தொண்ணூறு முட்டை. அது என்ன?” என்கிற விடுகதையைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். தென்னைமரம். தென்னைமரத்தில் தேங்காய்கள் என்பது தான் அதற்கான விடை.

 

ஒரு பக்கம் விளையாட்டு. மறு பக்கம் படைப்புத்திறன் வளர்ப்பு. குழி வெட்டுவது, ஒரு முட்டை (அதாவது ஒரு முற்றிய தேங்காய்) இடுவது, அது தொண்ணூறு முட்டை கொடுப்பது என்று விவசாய, தொழில் முறையை, பொருளாதாரத்தை கற்றுக் கொள்கிறார்கள் குழந்தைகள். இது தானே வாழ்க்கைக் கல்வி!

 

இலக்கியமும் இந்த விளையாட்டும்

சங்க இலக்கியம் பக்கம் கொஞ்சம் திரும்புவோம்!

“சிற்றில், சிறு பறை, சிறு தேர்,” என்ற விளையாட்டுகளும்

“நீராடல் - அம்மானை, ஊசல்” என்ற விளையாட்டுகளும் வாழையடி வாழையாக தமிழ் மரபில் விளையாடப்பட்டு வந்திருக்கின்றன.

 

சிற்றில் – சிறு இல்லம், வீடு கட்டி விளையாடுதல்

சிறு பறை – ஒலி வரக்கூடிய ஏதாவதொன்றைத் தட்டி விளையாடுதல்.

சிறு தேர் – மேல் விளக்கப்பட்ட விளையாட்டு போல விளையாடுதல்.

நீராடல் – நீர் நிலைகளில் நீராடி விளையாடுதல்.

அம்மானை – கழங்குக் காய்கள் (பின்னாளில் கல்லாங்காய்கள் என்று மருவியது) தூக்கி எறிந்து ஆடுவது.

ஊசல் – ஊஞ்சல் ஆடி விளையாடுதல்

 

இப்படிப் பல பெருமைகளைக் கொண்ட தென்னங்குரும்பையில் தேர் செய்யும் விளையாட்டை விளையாடி மகிழ்வோம்.

Comments


JOBA Logo transperent_edited.png

Inspiring Natural Living

John Britto Academy

JOBA

Registered in Australia: ASIC under section 33(8) of BNR Act 2011
 

bottom of page