கொட்டாங்குச்சியில் குதிரை
தேவையான பொருட்கள்: இரண்டு கொட்டாங்குச்சிகள், இரண்டு கயிறுகள்
செய்முறை: மூன்று கண்கள் உள்ள இரண்டு கொட்டாங்குச்சிகளை எடுத்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு கொட்டாங்குச்சியிலும் ஒரு கண்ணை ஓட்டை போடுங்கள். உங்கள் உயரத்திற்கேற்றவாறு இரண்டு அல்லது மூன்று அடி கயிறு எடுத்துக்கொள்ளுங்கள். படத்தில் காட்டியுள்ளபடி இரண்டு கொட்டாங்குச்சிகளின் ஓட்டைக்குள்ளும் விட்டு முடிச்சி போடுங்கள். இப்பொழுது உங்கள் குதிரை தயார்.
விளையாட்டு: கொட்டாங்குச்சிகளின் மேல் நின்று கொள்ளுங்கள். கயிறை இரண்டு கைகளிலும் கெட்டியமாகப் பிடித்துக் கொள்ளுங்கள். இப்பொழுது குதிரை மேல் ஏறிவிட்டீர்கள். பிறெகென்ன? தட்டிவிடுங்கள். குதிரை ஊருக்கு பறக்கட்டும்.
கொட்டாங்குச்சியில் தராசு
தேவையான பொருட்கள்: இரண்டு கொட்டாங்குச்சிகள், ஆறு கயிற்றுத் துண்டுகள், ஒரு சிறு கயிறு, குச்சி
செய்முறை: இரண்டு கொட்டாங்குச்சிகளை எடுத்துக்கொள்ளுங்கள். கொட்டாங்குச்சிகளில், படத்தில் காட்டியுள்ளபடி தலா மூன்று ஓட்டைகளைப் போடுங்கள். ஒவ்வொரு கொட்டாங்குச்சி ஓட்டை வழியாகவும் கயிறை விட்டு முடிச்சிப் போடுங்கள். ஒரு சம குச்சியின் இரண்டு ஓரங்களிலும், சிறிது பள்ளம் செய்துகொண்டு, அங்கே கயிறைக் கட்டுங்கள். குச்சியின் நடுவே ஒரு சிறு கயிறைக்கட்டி தூக்குங்கள். உங்கள் தராசு தயார்.
விளையாட்டு: கடையில் பொருட்களை தராசில் போட்டு விற்பது போல விளையாடி மகிழலாம்.
கூடுதல் தகவல்
முன் காலங்களில் பானையில் சோற்றைக் கிண்ட கொட்டாங்கச்சி கொண்டு தான் அகப்பை செய்வார்கள். அது சூடு தாங்கும். சூட்டுடன் நடக்கும் வேதியல் பாதிப்பு கிடையாது. அது உள்ளூர் பொருளாதாரம். மண் சார்ந்த பொருளாதாரம். தற்சார்பு. கொட்டாங்கச்சியை எரிச்சி கார்பன் ஆக்கி, நீரை சுத்தப்படுத்துவார்கள். பாட்டரி தண்டுக்கு பயன்படுத்துவார்கள். கொட்டாங்கச்சி அடுப்பு எரிப்பதற்கு மட்டுமல்ல, பல பயன்கள் உண்டு. வைக்கோல் கூளத்தையும் கொட்டாங்கச்சியையும் பயன்படுத்தி உள்ளூர் உயவுமசி (Grese) செய்வார்கள். அதை மாட்டு வண்டிக்கு பயன்படுத்துவார்கள். சிறு பிள்ளைகளுக்கு பொட்டு வைக்க கொட்டாங்கச்சியை சூடுபடுத்தி அந்த கண்மையைப் பயன்படுத்துவார்கள். தேன் மெழுகு அல்லது தாவர எண்ணெயைத்தான் சூடுபடுத்த பயன்படுத்த வேண்டும். கொட்டாங்கச்சியைப் பயன்படுத்தி பெண்கள் தலையில் கொண்டை போடுவார்கள். அதில் வயலின் போன்ற இசைப் பொருட்களைச் செய்வார்கள். கருப்பட்டி செய்யவும் கொட்டாங்கச்சியைப் பயன்படுத்துவார்கள்.
コメント