பிள்ளையார் குத்து - பாரம்பரிய விளையாட்டு 14
- John Britto Parisutham
- Apr 6
- 1 min read
Updated: Apr 6
இருவர் எதிர் எதிரே நின்றுக்கொள்ளுங்கள். யார் குத்துவது? யார் பிடிப்பது? என முடிவு செய்துக் கொள்ளுங்கள். பிடிப்பவர், தங்கள் இரு கைகளையும் தாமரைப் பூ போல, விரித்து வைத்துக்கொள்ளுங்கள். குத்துபவர், கீழ்க்காணும் பாட்டைப் பாடிக்கொண்டே அவரது கைகளில் குத்த வேண்டும். அவர் குத்த, குத்த, பிடிப்பவர் கடைசி வரியில் அவரது கைகளைப் பிடிக்க தயார் நிலையில் இருக்க வேண்டும். பாட்டின் கடைசி வரியில் “புடிச்சுக்கோ குத்து” என்று சொல்லி குத்தும் போது குத்துபவரின் கைகளை பிடிக்க முயற்சிக்க வேண்டும். பிடித்து விட்டால் பிடிப்பவர் வெற்றி பெற்றவர். இல்லையெனில் குத்துபவர் வெற்றி பெற்றவர்.
பாட்டு: குத்து குத்து, கும்மாங் குத்து
அம்மா குத்து, அப்பா குத்து,
பாட்டி குத்து, தாத்தா குத்து,
அக்கா குத்து, அண்ணா குத்து,
தம்பி குத்து, தங்கச்சி குத்து,
அந்த குத்து, இந்த குத்து,
புதுசா குத்து, புடிச்சிக்க குத்து
கூடுதல் தகவல்:
பாருங்கள். பாட்டிலேயே குடும்ப உறவுகளைத் தெரிந்துக்கொள்ளலாம். குத்தும் போது, கைகள் வலுப்படும். இதைப் பிடிக்குத்து என்றும் அழைப்பார்கள். விளையாட்டுக்கு விளையாட்டு. உடற்பயிற்சிக்கு உடற்பயிற்சி. பாட்டுக்குப் பாட்டு. விளையாடுபவர்களுக்கிடையே உறவு வளர்தல். குத்த வருவது போல் வந்துவிட்டு குத்தாமல் இருப்பது. கவனம் சிதறும் போது ‘டபாரென்று’ குத்துவது என்று புத்திசாலித்தனமும் வெளிவரும். குழந்தைகளிடம் பெரியவர்கள் விளையாடும் போது, பெரியவர்கள் தோற்பது போல் நடித்து, குழந்தைகளுக்கு பெரு மகிழ்ச்சியைக் கொடுப்பதையும் பார்க்க முடியும். பிள்ளையார் குத்து என்று ஏன் பெயர் வந்தது என்று தெரியவில்லை.
Comments