சாஞ்சாடம்மா சாஞ்சாடு - பாரம்பரிய விளையாட்டு 16
- John Britto Parisutham
- Apr 6
- 1 min read
இந்த விளையாட்டை இரு வேறு விதமாக ஆடலாம்.
முதல் முறை: முன்னே ஒருவரை சம்மணம் போட்டு உட்கார வையுங்கள். அவரின் முதுகில் ஒரு கையை வையுங்கள். இன்னொரு கையை அவரது நெற்றியில் வையுங்கள். உட்கார்ந்திருப்பவர் முன்னும் பின்னும் ஆடுவதற்கு தயாராக உட்கார்ந்திருக்க வேண்டும். நெற்றியில் வைத்திருக்கும் கையால் பின்னுக்கு மெதுவாகத் தள்ளுங்கள். முதுகில் வைத்திருக்கும் கையால் தாங்கிப்பிடித்து முன்னுக்குத் தள்ளுங்கள். இப்படி முன்னும் பின்னும் தள்ளும் போது கீழ்க்கண்ட பாடலைப் பாடிக்கொண்டே தள்ளுங்கள்.
இரண்டாம் முறை: (குழந்தைகளை வைத்து விளையாடும் முறை) நீங்கள் மல்லாக்க படுத்து கால்களை தூக்கிக்கொள்ளுங்கள். குழந்தை உங்கள் கால்களில் ஏறிக்கொள்ளட்டும். குழந்தையின் கைகளைப்பிடித்துக்கொண்டு, கீழ்க்கண்ட பாடலைப் பாடிக்கொண்டே முன்னும் பின்னும் ஆடுங்கள்.
பாடல்: சாஞ்சாடம்மா சாஞ்சாடு
சாயக்கிளியே சாஞ்சாடு
குத்துவிளக்கே சாஞ்சாடு
கோயில் புறாவே சாஞ்சாடு
கண்ணே மணியே சாஞ்சாடு
காவிய நிலவே சாஞ்சாடு
பட்டுச்செல்லம் சாஞ்சாடு
படகு போல சாஞ்சாடு
சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு
சாயக்கிளியே சாய்ந்தாடு
அன்னக்கிளியே சாய்ந்தாடு
ஆவாரம்பூவே சாய்ந்தாடு
குத்துவிளக்கே சாய்ந்தாடு
கோயில் புறாவே சாய்ந்தாடு
மயிலே குயிலே சாய்ந்தாடு
மாடப்புறாவே சாய்ந்தாடு
சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு
தாமரைப்பூவே சாய்ந்தாடு
குத்துவிளக்கே சாய்ந்தாடு
கோயிற் புறாவே சாய்ந்தாடு
பச்சைக்கிளியே சாய்ந்தாடு
பவழக்கொடியே சாயந்தாடு
சோலைக்குயிலே சாய்ந்தாடு
சுந்தரமயிலே சாய்ந்தாடு
கண்ணே மணியே சாய்ந்தாடு
கற்பகக் கொடியே சாய்ந்தாடு
கட்டிக் கரும்பே சாய்ந்தாடு
கனியே பாலே சாய்ந்தாடு.
கூடுதல் தகவல்: தமிழர் வாழ்வியலில் பிள்ளைத்தமிழ் என்ற ஓர் இலக்கியப் பிரிவு இருக்கிறது. அதன் பிரகாரம் பருவங்களை காப்புப் பருவம், செங்கீரைப் பருவம், தாலப் பருவம், சப்பாணிப் பருவம், முத்தப் பருவம், வருகைப் பருவம், அம்புலிப் பருவம், அம்மானைப் பருவம், நீராடற் பருவம், ஊசற் பருவம் என்று வகைப்படுத்தியுள்ளனர். அவைகளில் தாலப் பருவம், சப்பாணிப் பருவங்களில் (அதாவது ஏழு, எட்டு, ஒன்பதாம் மாதங்களில்) இந்த விளையாட்டை விளையாடுவர்.
அப்படி விளையாடும் போது குழந்தைகளின் எலும்புகள் உறுதியாகும். இலகுவாகும். தாயும் குழந்தையாகும் தருணம் இது
Comments