நண்டூறுது...நரியூறுது - பாரம்பரிய விளையாட்டு 17
- John Britto Parisutham
- Apr 6
- 1 min read
குழந்தையின் ஒரு கையை பிடித்துக்கொள்ளுங்கள். உள்ளங்கையில் உங்கள் முழங்கையை வைத்து ‘பருப்பு கடை. பருப்பு கடை’ எனச் சொல்லி பருப்பு கடைவதைப் போல செய்யுங்கள். அதன் பிறகு குழந்தையின் ஒவ்வொரு விரலையும் பிடித்து நன்றாக அமுக்கி விட்டு…சாதம், குழம்பு, பருப்பு, தயிர், காய் என ஆரோக்கியமான உணவை ஒவ்வொன்றாகச் சொல்லுங்கள். ஒவ்வொரு விரலுக்கும் ஒவ்வொரு உணவு.
அடுத்து உணவை எல்லாம் பிசைந்து, குழந்தையின் உள்ளங்கையை தட்டாக நினைத்து, கற்பனையில் உள்ள உணவை எடுத்து ‘அப்பாவுக்கு கொஞ்சம், அண்ணனுக்கு கொஞ்சம், அக்காவுக்கு கொஞ்சம், மாமாவுக்கு கொஞ்சம், அத்தைக்கு கொஞ்சம்’ என்று சொல்லி ஊட்டிவிடுங்கள். நீங்கள் விரும்பிய உறவுகளைச் சேர்த்துக்கொள்ளலாம்.
அதில் ‘நாயிக்கு கொஞ்சம், காக்காவுக்கு கொஞ்சம்’ என பறவைகளையும் விலங்குகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள். அடுத்து தட்டை கழுவுங்கள். கழுவி ஊத்தும் போது, ‘கழுவி கழுவி மரத்துக்கு ஊத்து, கழுவி கழுவி செடிக்கு ஊத்து’ என சுற்றி உள்ள இயற்கை வளங்களைச் சேர்த்துக்கொள்ளுங்கள்.
இப்பொழுது தான் ஆட்டத்தில் ஒரு திருப்பு முனை. உணவு தயாரித்து, ஊட்டி, தட்டை கழுவியதும், உங்கள் ஆட்காட்டி விரலையும், நடு விரலையும் குழந்தையின் உள்ளங்கையிலிருந்து ‘நண்டு ஊறுது… நரி ஊறுது…’ என்று பாடியபடியே நடக்க விடுங்கள். பின் குழந்தையின் அக்குளில் ‘கிச்சி கிச்சி’ மூட்டுங்கள். குழந்தை சிரிப்பதை பார்த்து அதனோடு சேர்ந்து சிரித்து மகிழுங்கள்.
இந்த விளையாட்டில் உணவு, உறவு, உணர்வு, இயற்கை, மருத்துவம் எனப் பல விடயங்கள் இருப்பதை கவனிக்கவும்.
கூடுதல் தகவல்: விரல்களை இழுத்து விடுவது உடற்பயிற்சி. உணவைப் பற்றிச் சொல்லும் போது அதில் என்னென்ன பொருட்கள் இருக்கின்றன என்று குழந்தைகள் கற்றுக் கொள்கின்றனர். அதை நான் மட்டும் உண்ணக்கூடாது மற்றவர்களுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் பகிர்ந்துக் கொடுக்க வேண்டும் என்கிறதையும் சேர்த்துக் கற்றுக்கொள்கின்றனர். பகிர்வு என்கிற விழுமியத்தையும் பரிவு என்ற விழுமியத்தையும் இந்த விளையாட்டில் கற்றுக்கொள்கின்றனர். பெற்றோருக்கும் குழந்தைக்கும் உள்ள ஓர் இணைப்பு இதில் வெளிப்படும். உணவைப் பற்றிச் சொல்லும் போது குழந்தைக்கு எச்சில் சுரக்கும். அதனால் குழந்தை பசியோடு நன்கு சாப்பிடும். உண்ட உணவு நன்கு செரிக்கும். கையில் உணவு இருக்காது. அது அங்கு இருப்பது போல் பாவித்து உணவை ஊட்டும் போது குழந்தையும் அதை உண்பது போல் கற்பனை செய்யும். கற்பனை வளம் பெருகும். பருவத்திற்கு ஏற்றாற் போல் விளையாட்டும் மாறும். வயதிற்கேற்ப விளையாட்டும் மாறும்.
Comments