top of page

உப்பு மூட்டை - பாரம்பரிய விளையாட்டு 18

Updated: Apr 7



உங்கள் குழந்தையை முதுகில் ஏற்றிக்கொள்ளுங்கள். உங்கள் குழந்தை தான் உப்பு மூட்டை. நீங்கள் தான் உப்பு மூட்டை விற்பவர். ‘உப்பு…உப்பேய்…’ என விற்கத் துவங்குங்கள். பக்கத்தில் இருக்கும் ஒருவர் உங்களை அழைப்பார். ‘ஏய் உப்பு.. இங்க வாப்பா’ என்பார். அவர் அருகில் போய் நில்லுங்கள்.

 

‘இது என்ன உப்பு’

‘இது கல்லு உப்பு’

‘எங்க போகுது?’

‘கடைக்குப் போகுது.’

‘எந்த கடைக்கு?’

‘மளிகை கடைக்கு’

‘எனக்கு மூணு மூட்டை உப்பு தாப்பா…’

‘ம்.. புஸ்க்கு’ என்று சொல்லி ஒரு சுற்று சுற்றி வாருங்கள்.

 

மறுபடியும் ‘உப்பு…உப்பேய்…’ என விற்க துவங்குங்கள். மறுபடி அவர் அழைப்பார்.

‘ஏய் உப்பு…’

‘என்ன?’

‘இங்க வாப்பா’

‘வந்துட்டேன்’

‘இது என்ன உப்பு’

‘இது கல்லு உப்பு’

‘எங்க போகுது?’

‘கடைக்குப் போகுது.’

‘எந்த கடைக்கு?’

‘மளிகை கடைக்கு’

‘எனக்கு மூணு மூட்டை உப்பு தாப்பா…’

நிமிர்ந்து குனிந்து ‘ஒன்னு, ரெண்டு, மூணு’ என்று மூணு மூட்டைகளை இறக்குங்கள்.

‘காசு குடுங்க’ என்றதும் அவர் காசு குடுக்க, குழந்தையை வாங்கச்சொல்லுங்கள்.

 

இப்படித் தொடருங்கள்.

 

கூடுதல் தகவல்: பாரி வள்ளலின் மகள்கள் அங்கவை, சங்கவை என்று இரண்டு பேர். அவர்கள் தங்கள் தந்தையையும், தாங்கள் வாழ்ந்த பறம்பு மலையையும் மூவேந்தர்களிடம் இழந்து விட்ட பிறகு இருந்த நிலையை புறநானூற்றுப் பாடல் ஒன்று சொல்கிறது. அப்பொழது அவர்கள் ஆற்றில் உப்புமூட்டை தூக்கிப் போகும் வண்டிகளை எண்ணிக் கொண்டே இருந்தார்கள் என்று ஒரு தகவல் கூறுகிறது. அந்தப் பாடல் இதோ!


பாடலின் பின்னணி :

பாரி இறந்த பின்னர், அவரது இரு மகளிரையும் கபிலர் பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்து அவர்களைக் காப்பாற்றி வந்தார். பாரி இறந்து ஒரு மாதம் ஆகிய பிறகு, ஒரு நாள் முழு நிலவில் அவர்களுக்குத் தங்கள் தந்தையின் நினைவும் நாட்டின் நினைவும் வந்து அவர்களை வாட்டியது. அம்மகளிர் தம் மனவருத்தத்தை இப்பாடலில் வெளிப்படுத்துகிறார்கள் !

 

புறநானூறு.பாடல்.112.

அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவின்

எந்தையும் உடையேம்எம் குன்றும் பிறர்கொளார்;

இற்றைத் திங்கள் இவ்வெண் நிலவின்

வென்றுஎறி முரசின் வேந்தர்எம்

குன்றும் கொண்டார்யாம் எந்தையும் இலமே!

 

பாடலின் பொருள்:

ஒரு மாதத்திற்கு முன்பு, நிறைமதி நீலவானில் ஓளிவீசிக் கொண்டிருந்த அந்த நாளில் நாங்கள் எங்கள் தந்தையைப் பெற்றிருந்தோம்; எங்கள் ஆட்சிக்குரிய (பறம்பு) மலையும் எங்களிடம் இருந்தது. அதேபோல், இன்றும் நிறைமதி நீலவானில் உலா வந்து கொண்டிருக்கிறது. ஆனால், இந்நாளில் எம் தந்தையும் இல்லை; எம் மலையும் எம்மிடம் இல்லை !

போரில் வென்ற வேந்தர்கள் எங்கள் மலையைக் கவர்ந்து கொண்டனர்; நாங்கள் எங்கள் தந்தையை இழந்து நிற்கிறோம் !


பழமொழிகள்:

"உப்பு" (salt) தமிழ் வாழ்வியலில் மிக முக்கியமான பொருளாக இருப்பதால், அதைப் பற்றிய பழமொழிகள் தமிழ் பண்பாட்டில் ஆழமாக வேரூன்றியுள்ளன. உப்பு அதன் சுவை, பாதுகாப்பு பண்பு, மற்றும் அத்தியாவசியத் தன்மை ஆகியவற்றை உருவகமாகக் கொண்டு பல பழமொழிகளில் பயன்படுத்தப்படுகிறது.

 

1. "உப்பில்லாப் பண்டம் குப்பையிலே" - உப்பு இல்லாத உணவு குப்பையில் போடுவதற்கு மட்டுமே உகந்தது; அதாவது, அடிப்படை இல்லாத ஒன்று பயனற்றது. அதாவது, உப்பு உணவுக்கு சுவையை அளிக்கிறது; அதைப் போல, ஒரு செயலுக்கு அதன் அடிப்படை முக்கியம் என்பதை வலியுறுத்துகிறது. எ.கா: "அவன் பேச்சு உப்பில்லாப் பண்டம் குப்பையிலே போலத்தான் இருந்தது."

 

2. "உப்பைத் தின்றவன் தண்ணீரைக் குடிப்பான்" - உப்பை உண்டவன் தண்ணீர் குடிக்க வேண்டிய நிலை வரும்; அதாவது, ஒரு செயலின் விளைவை அனுபவிப்பது தவிர்க்க முடியாதது. உப்பு தாகத்தை உண்டாக்குவது போல, ஒரு செயலைச் செய்தவன் அதன் பலனை (நல்லதோ கெட்டதோ) சந்திக்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது. எ.கா: "அவன் பொய் சொன்னான், இப்போது உப்பைத் தின்றவன் தண்ணீரைக் குடிப்பான் போல உண்மையை ஒப்புக்கொள்ள வேண்டியிருக்கிறது."

 

3. "உப்புக்கு உரைத்தவன் உறவுக்கு உரைப்பான்" - உப்பை சரியாக அளந்து பயன்படுத்துபவன் உறவுகளையும் சரியாகப் பேணுவான். அதாவது, உப்பை அளவாகப் பயன்படுத்துவது சமையலில் திறமையைக் காட்டுவது போல, உறவுகளை அளவாக பேணுவது வாழ்க்கையில் ஞானத்தைக் காட்டுகிறது. எ.கா: "அவள் சமையலில் உப்புக்கு உரைத்தவள், உறவிலும் அப்படித்தான்."

 

4. "உப்புச் சப்பு இல்லாத பேச்சு கேட்காது" - உப்பு சப்பு (சுவை) இல்லாத பேச்சு கேட்க இனிமையாக இருக்காது; அதாவது, சுவாரஸ்யம் இல்லாத பேச்சு பயனற்றது. உப்பு உணவுக்கு சுவை தருவது போல, பேச்சுக்கு உயிர்ப்பும் சுவையும் தேவை என்பதை வலியுறுத்துகிறது. எ.கா: "அவன் உப்புச் சப்பு இல்லாமல் பேசினான், யாரும் கேட்கவில்லை."

Comments


JOBA Logo transperent_edited.png

Inspiring Natural Living

John Britto Academy

JOBA

Registered in Australia: ASIC under section 33(8) of BNR Act 2011
 

bottom of page